21ஆம் நூற்றாண்டில் உலகையே உலுக்கியெடுத்த நிகழ்வென்றால் அது கொரோனா பெருந்தொற்றுதான். இதன் தொடர்ச்சியாக அதிகம் பேசப்பட்ட ஒன்று மாரடைப்பால் ஏற்பட்ட மரணங்கள். நடிகர்கள் விவேக், புனீத் ராஜ்குமார் வரை பலர் மாரடைப்பால் உயிரிழந்த போது, அவர்களின் மரணத்தோடு அதிகம் விவாதிக்கப்பட்டது கொரோனா தடுப்பூசிகள் தான்.
இதற்கிடையே, வழக்கத்துக்கு மாறாக மிக மிக இளம் வயதினரும் மாரடைப்பால் உயிரிழந்த வீடியோக்களும் வெளியாகி மக்களை பீதி அடைய வைத்தன.
தனி மனிதர்களை தாக்கும் மாரடைப்புக்கு குஜராத்தில் நடந்த நவராத்திரி விழாவில் 12 பேர் உயிரிழந்ததுதான் நாட்டையே அதிரவைத்தது. மாரடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரத்தில் உயிரிழந்த அனைவரும் பதின்ம மற்றும் நடுத்தர வயதுடையவர்கள். இதில் 13 வயது சிறுவன் ஒருவனும் அடக்கம் என்பது தான் பேரதிர்ச்சி.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மாரடைப்பில் இருந்து தப்பிக்க கடின உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய விரிவான ஆய்வில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை கடும் உடலுழைப்பு செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், இதனால் மாரடைப்பில் இருந்து தப்பிக்க முடியும் எனவும் அவர் கூறி உள்ளார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு குறைவாக இருக்கும் என்பதால் எளிதாக மாரடைப்பு ஏற்படுவதாக தெரிவிக்கின்றன்னர் இதய நிபுணர்கள்.
நாளொன்றுக்கு குறந்தப்பட்சம் 30 நிமிடம் வரை உடற்பயிற்சியில் ஈடுபடுவதுடன் ஆரோக்கிய உணவு முறையை பின்பற்றினால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரிவிக்கின்றனர்..