காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக ஐபிஎல் மற்றும் டி.என்.பி.எல் கிரிக்கெட் வீரர் மீது இளம்பெண் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
புரசைவாக்கத்தை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவர், பெருங்குடியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஐபிஎல்- டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரர் ஆல் ரவுண்டர் ராஜகோபால் சதீஷ் என்பவரும் தானும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நண்பர்களாக பழகி வந்ததாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ராஜகோபால் சதிஷ் தன்னை காதலிப்பதாக கூறி, பின்பு கடந்த 31.12.2019ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, பெருங்குடியில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு பலமுறை அழைத்துச் சென்று தனிமையில் உல்லாசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 19.08.2020ம் ஆண்டு ராஜகோபால் சதீஷ் சொந்த ஊரான திருச்சிக்கு சென்ற நிலையில், தான் ஒரு நாள் திருச்சி சென்று பார்த்தபோது ராஜகோபால் சதீஷுக்கு சாம்பவி என்ற மனைவி இருப்பது தெரிய வந்ததாகவும், இதையடுத்து அவருடன் வாக்குவாதம் செய்துவிட்டு கோபித்துகொண்டு பின்னர் அங்கிருந்து சென்னை வந்துவிட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ராஜகோபால் சதீஷ் உடனான தொடர்பை துண்டித்துவிட்டு தனது பெற்றோர் பரத் என்பவரை 21.12.2022-இல் திருமணம் செய்து வைத்ததாகவும், திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் பரத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பெருங்குடியில் தான் பெற்றோருடன் தங்கி இருந்த 13.05.2022-ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்டு தன்னிடம் மீண்டும் நட்பை தொடர வேண்டும் என ராஜகோபால் சதீஷ் கூறியதாகவும், கடந்த 14.04.2023-ம் தேதி கொடைக்கானல் அழைத்து சென்று அங்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனால் தான் கர்ப்பமாக உள்ள நிலையில் இந்த விஷயம் தெரிந்த ராஜகோபால் சதீஷின் மனைவி சாம்பவி, நண்பர் சுரேகா ஆகியோர் தன்னை கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி மிரட்டுவதாகவும், அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அடையாறு காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்ததாகவும், ஆனால் தரமணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை நடத்தி எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் இருப்பதால் மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.