நெதர்லாந்து சாதனை.. மண்ணைக் கவ்விய வங்கதேசம்

முதல் முறையாக ஒரே உலகக்கோப்பை தொடரில் இரண்டு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது நெதர்லாந்து.

முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய நெதர்லாந்து தற்போது, வங்கதேச அணியை வீழ்த்தி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

வங்கதேசம் – நெதர்லாந்து அணிகள் மோதிய இந்தப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் விக்ரம்ஜித் சிங் 3, மேக்ஸ் ஓடோட் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால், மிடில் ஆர்டரில் வெஸ்லி 41, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 68 ரன்கள் சேர்த்தனர். சைப்ரண்ட் 35, லோகன் வான் பீக் 23 ரன்கள் சேர்த்து நெதர்லாந்து அணி 200 ரன்களை கடக்க உதவினர். அந்த அணி சரியாக 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 229 ரன்கள் சேர்த்தது.

வங்கதேச அணிக்கு இது எளிதான இலக்கு என கருதப்பட்ட நிலையில், அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்து 142 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. மெஹிதி ஹசன் மிராஜ் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து அணியின் பால் வான் மீகெரன் 4 விக்கெட்கள் வீழ்த்தி நெதர்லாந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் நெதர்லாந்து அணி தன் அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனாலும், அந்த அணி அரை இறுதி செல்வது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இனி வரும் போட்டிகளில் தோல்வி அடைந்து, நெதர்லாந்து மீதமுள்ள தனது போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நடக்கும்.

வங்கதேச அணி தான் ஆடிய ஆறு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று 2 புள்ளிகளுடன் மோசமான நிலையில் உள்ளது. அந்த அணி கிட்டத்தட்ட தன் அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டது. நெதர்லாந்து ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று, ஒரே உலகக்கோப்பை தொடரில் இரண்டு வெற்றிகளை முதல்முறையாக பெற்று சாதனை படைத்துள்ளது

 

Recommended For You

About the Author: admin