கிடுகிடுவென உயர்ந்த சின்ன வெங்காய விலை.

கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக ஆயிரத்து 200 டன் வெங்காயம் வரும் நிலையில், தற்போது 700 டன் மட்டுமே வந்துள்ளது. நாசிக் வெங்காயம் வரத்து குறைந்ததால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வந்துகொண்டிருந்தது.

தற்போது, அந்த பகுதிகளிலும் போதிய விளைச்சல் இல்லாததால் வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக ஆயுத பூஜைக்கு முன்பு கிலோ 20 ரூபாயாக இருந்த வெங்காயம் நாள்தோறும் அதிகரித்து தற்போது 65 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் சின்ன வெங்காயத்தின் விலையும் கிலோ 110 முதல் 120 ரூபாயாக அதிகரித்துள்ளது. தீபாவளி வரையில் இந்த விலை உயர்வு நீடிக்கும் எனவும், அதன் பின் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபரிகள் தெரிவிக்கின்றனர்.

வரத்து குறைவு

கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வரவேண்டிய வெங்காயத்தின் அளவு கணிசமாக குறைந்ததால் டெல்லியில் வெங்காயத்தின் விலை கிலோ 80 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நவம்பர் முதல் வாரத்தில் கிலோ நூறு ரூபாய் வரை தொட வாய்ப்புள்ளதாக வணிகர்கள் கணித்துள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலத்திலும் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக புனே,நாசிக், சோலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெங்காயத்தின் வரத்து அடுத்த மாதம் தான் அதிகரிக்கும் என்பதால் தற்போது வெங்காயத்தின் விலை அதிகளவில் இருப்பதாக வெங்காய விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். மும்பை மட்டுமின்றி, உத்தரபிரதேசம், ஒடிசா ,ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் வெங்காய விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

Recommended For You

About the Author: admin