புலி பல்லுடன் கூடிய சங்கிலி அணிந்திருந்ததால் கைதான கர்நாடக பிக்பாஸ் போட்டியாளர் சிறையில் அடைக்கப்பட்டார். தங்க டாலருடன் புலி பல்லை பதித்து ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர் வனத்துறையினர் கையில் வசமாகச் சிக்கியது எப்படி?
கர்நாடகாவில், தனியார் தொலைக்காட்சி சார்பில் ‘பிக்பாஸ்’ எனப்படும் ரியாலிட்டி ஷோவின் 10-வது சீசன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் என்ற வர்த்தூர் சந்தோஷ் போட்டியாளராக இருந்து வந்தார்.
விவசாயியான சந்தோஷ், எருது விடும் போட்டிகளில் பங்கேற்பது, அதிகமான தங்க நகைகளை அணிவதன் மூலமாக பிரபலமாகி இருந்தார். இந்த நிலையில், சந்தோஷ் தனது கழுத்தில் புலி பல்லுடன் கூடிய சங்கிலியை அணிந்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை புகாராகப் பெற்றுக் கொண்ட வனத்துறையினர் விசாரணையைத் தொடங்கினார்கள்.
கடந்த 22ஆம் தேதி நள்ளிரவு, ராஜராஜேஸ்வரிநகரில் உள்ள பிக்பாஸ் வீட்டுக்கு வனத்துறையினர் சென்றனர். நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் விவரத்தைக் கூறி, சந்தோஷை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரவழைத்தனர். விசாரணை எனக்கூறி அவரை காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார், சந்தோஷ் அணிந்திருந்த டாலரை வாங்கி பரிசோதனை செய்தனர்.
அதில், தங்கத்தால் செய்யப்பட்ட டாலரில் புலியின் பற்களை பொருத்தி அணிந்தது உறுதியானது. இதையடுத்து, பிக்பாஸ் போட்டியாளர் சந்தோஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தங்க டாலருடன் கூடிய புலி பற்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தோஷுக்கு அந்த புலி பற்கள் எப்படி கிடைத்தது?; யார் அதனை கொடுத்தார்கள்? உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வனத்துறையின் சட்ட விதிமுறைகளின்படி புலி பற்களை விற்பனை செய்யவோ, வாங்குவதற்கோ அனுமதி கிடையாது.
இதன் காரணமாக சந்தோஷை கைது செய்திருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் கைதான சந்தோஷை பெங்களூரு நீதிமனறத்தில் ஆஜர்படுத்த, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, பிக்பாஸ் போட்டியாளர் சந்தோஷ் பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சந்தோஷ் அணிந்திருந்த புலி பற்களை ஒரு நகை வியாபாரி தான் டாலர் போல செய்து கொடுத்ததாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த நகை வியாபாரியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் கைது செய்யப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.