தமிழ்நாட்டு ஜெயிலர் முத்துவேல் பாண்டியனிடம் ரீல் LIFE-ல் சிக்கியது போலவே, கேரள போலீசிடம் ரியலாக சிக்கியிருக்கிறார் “வர்மா” விநாயகன்
“எந்தா சாரே..” என்று ஜெயிலர் படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் விநாயகன். தனித்துவமான நடிகர், பாடகர், நடனக் கலைஞர் என கவனமீர்த்து தனக்கென தன் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள விநாயகன், ஜெய்லரில் வர்மன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களையும் ஈர்த்துள்ளார். அடுத்த மாதம் ரிலீசாக உள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக விநாயகன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் விநாயகன். தான் இதுவரை பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஒருவரை பிடித்து இருந்தால் நேராகவே கேட்பேன் என விநாயகன் ஒருமுறை மேடையில் பேசியது சர்ச்சை ஆனது. இது போன்று அவரது சர்ச்சைகள் ஏராளம்.
தற்போது விநாயகன் வீட்டில் இருந்து சத்தம் அதிகமாக வருவதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த நடிகர் எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்தில் நுழைந்து ரகளை செய்துள்ளார், அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இருக்கின்றனர். அவரது கைது மலையாள சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே கேரளா முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மரணம் குறித்து முகநூலில் சர்ச்சைக்குரிய விடியோ பதிவிட்டு இவர் மீது கேரளா போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகி இருந்த சம்பவம் கூட நிகழ்ந்த நிலையில் தற்போது குடி போதையில் போலீசாரிடம் ரகளை செய்து கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.