ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை தட்டி சென்றிருக்கிறது. முதல் முறையாக ஆசிய போட்டிகளில் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று அசத்தியிருக்கிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் ஆசியப் போட்டிகளுக்கு இரண்டாம் தர அணியையே இந்தியா அனுப்பியது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி தர வரிசையில் முதன்மையில் இருந்ததால் அவர்கள் நேரடியாக காலி இறுதிச்சுற்றில் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.
காலிறுதியில் நேபாளை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரை இறுதியில் வங்கதேசத்தை ஒன்பது விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. இதேபோன்று இறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி புள்ளி பட்டிகளின் அடிப்படையில் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றது. இந்த நிலையில் இந்திய அணி சுதந்திரம் பெற்ற பிறகு கிரிக்கெட் உலகில் பெறும் முதல் அதிகாரப்பூர்வ வெற்றி இதுதான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா
ஆம் இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் அணிகளை தேர்வு செய்து போட்டிகளை நடத்துவது பிசிசிஐ என்ற ஒரு தனியார் அமைப்பு தான். பிசிசிஐயை எந்த அரசு இயந்திரமும் கட்டுப்படுத்தாது.
இன்னும் சொல்லப்போனால் போட்டிகளை நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு பிசிசிஐ என்ற தனியார் சங்கம் வருமான வரி செலுத்துகிறது. இதனால் இந்தியா பெறும் வெற்றிகள் எல்லாம் பிசிசிஐயின் அணி பெரும் வெற்றியாகவே பலரும் கருதி வந்தனர்.
இந்த நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் முதல் முறையாக 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற நாடுகள் எல்லாம் தங்களது அணியை தேர்வு செய்து அனுப்பிய நிலையில் இந்தியா மட்டும் அனுப்பவில்லை.
காரணம் ஆசிய போட்டி, காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமென்றால் அதனை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் மூலம் தான் செல்ல முடியும்.
ஆனால் இந்தியாவில் கிரிக்கெட்டின் கட்டுப்பாடு பிசிசிஐ என்ற தனியார் அமைப்பில் இருந்தது. இதனால் அந்த அதிகாரத்தை நாங்கள் வழங்க மாட்டோம் என்று கூறி பிசிசிஐ 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டு ஆசிய போட்டியில் இந்திய அணியை அனுப்ப மறுத்து விட்டது. அதன் பிறகு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஐசிசி ஈடுபட்டது.
இதற்கு பிசிசிஐயும் ஒப்புதல் வழங்கியது. ஆனால் கிரிக்கெட் தொடர்பாக அணி தேர்வு அனைத்தையும் தங்கள் அமைப்பை மேற்கொள்ளும் என்று கூறியது. இதற்கு மத்திய அரசு சார்பில் ஒப்புதல் வழங்கியதை அடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு பிசிசிஐ வீரர்களை தேர்வு செய்து அனுப்பியது.
எனினும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு மத்திய அரசுதான் வீரர்களை அனுப்பும் செலவை ஏற்கிறது. மேலும் இந்தியா அரசு சார்பாக வீரர்கள் பங்கேற்பார்கள். இதனை அடுத்து முதல் முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி ஜெர்சியில் பிசிசிஐயின் லோகோ இல்லாமல் இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் லோகோவும் இந்திய கொடியின் லோகோவும் இடம்பெற்றிருந்தது.
இதன் மூலம் தற்போது ருதுராஜ் ஜெயக்குமார் தலைமையிலான இந்திய அணி தங்கப் பதக்கமும் மகளிர் பிரிவில் இந்திய கிரிக்கெட் அணி தங்கப் பதக்கமும் வென்றது. இதை அடுத்து சுதந்திர இந்தியாவில் தற்போது தான் முதல்முறையாக இந்திய அரசு சார்பாக கிரிக்கெட்டில் இந்திய அணி அதிகாரப்பூர்வமாக பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.