வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உத்தியோகபூர்வ பயணமாக ரஷ்யா செல்லவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்களை வடகொரியாவிடம் இருந்து பெற முடியுமா என்பது குறித்து இதன்போது விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பயணம் அடுத்தமாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கிம் ஜாங் உன் கவச ரயிலை பயன்படுத்துவார் என கணிக்கப்பட்டுள்ளது.
அவர் இரு நாட்டு எல்லை வழியாக வந்து, அருகில் உள்ள ரஷ்ய நகரான விளாடிவோஸ்டோக்கில் அதிபர் புதினை சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே ஆயுத பேரங்கள் இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்ய போரில் வடகொரியாவின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அண்மையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த தகவலை வடகொரியா மறுத்திருந்தது. இருப்பினும் தற்போது இருநாட்டு தலைவர்களின் சந்திப்பானது இந்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.