யாழ் உரும்பிராயில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கதறும் தாய்

யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் பணிப்பெண்ணாக இருந்த 17 வயதான தர்மிகா என்ற சிறுமி கடந்த ஜுலை மாதம் 23 ஆம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இவ் விடயம் தொடர்பான உண்மை நிலையை அறிந்து கொள்ள சிறுமி பணிபுரிந்த வீடு மற்றும் சிறுமியில் வீட்டுக்கு சென்று தகவலை சேகரித்துள்ளனர்.

பல முயற்சிகள் எடுத்தும் சம்பந்தப்பட்ட தரப்பினரது ஒத்துழைப்பு எமக்கு கிடைக்காததால் முழுமையாக தகவலை வெளியிட முடியவில்லை, இருப்பினும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட ஊரவர்கள் இந்த சிறுமிக்கு நடந்தது அநீதி அதற்கு நீதி கிடைக்கவேண்டும் என தமது ஆதங்கங்களை வெளியிட்டிருந்தனர்.

சிறுமியை வீட்டுப்பணிக்கு இருத்தியது ஏன்? சிறுமிக்கு நடந்த அநீதியை பெற்றோர் கண்டுகொள்ளாதது ஏன்? பரிசோதனைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்ட நிலையிலும் சடலத்தை எதற்காக எரித்தார்கள்? என்ற பல கேள்விகளுடன் சமூக வலைத்தளங்களிலும் பலர் சிறுமி ஒருவர் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார் என்ற சம்பவத்தை வன்மையாகக் கண்டித்திருந்தனர்.

இதனடிப்படையில் பொதுமக்களின் ஆதங்கங்களையும் கேள்விகளையும் ஊடகம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

முதலில் குறித்த சிறுமியின் குடும்ப நிலவரம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, முதலிகோயிலடியை சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா. இவர் கடந்த 2006.11.03 இல் பிறந்தவர். சிறுமியின் தாய் தற்போது 2வது திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்தில் 2 பிள்ளைகள் உள்ளனர். சிறுமியின் குடும்பம் சிறிய குடிசை வீடொன்றில் வசிக்கிறார்கள். தாயாரின் இரண்டாம் தார கணவன் கூலி வேலை செய்து வருகிறார்.

குறித்த உயிரிழந்த சிறுமி, கடந்த 2021ஆம் ஆண்டு பாடசாலையிலிருந்து இடைவிலகி தனது 14 வயதிலிருந்து வீட்டு வேலைகள் செய்து வருகிறார் என்றும் அறிய கிடைத்துள்ளது.

இந்த சிறுமி கடந்த 4 மாதங்களாக கல்வியங்காட்டில் உள்ள வீட்டில் பணிபுரிந்துள்ளார். மாதாந்தம் ரூ.25,000 ரூபா சம்பளம் பேசப்பட்டுள்ளது. சிறுமிக்கு பேசப்பட்ட சம்பளத்தில் ரூ.5 ஆயிரம் வீதமே கொடுக்கப்பட்டுள்ளது. மீதிப்பணத்தை வீட்டு உரிமையாளர்கள் பிடித்து வைத்துள்ளனர்.

மீதிப்பணத்தில் சிறுமிக்கு சங்கிலியொன்று செய்து கொடுக்குமாறு சிறுமியின் தாயாரே தம்மிடம் கேட்டதாக வீட்டு உரிமையாளர்கள் மரண விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியின் தாயார் கூறுகையில்,

வீட்டின் வறுமை நிலை காரணமாக எனது மகளை வேலைக்கு அனுப்பிவைத்தேன். எனவும் தனது மகளை சித்திரை மாதம் 16ம் திகதி வீட்டு வேலைக்கென அழைத்து சென்றனர். அதன் பின்னர் நான் போய் பார்த்து வந்திருந்தேன் என்றார்.

மாதத்தில் ஒருநாள் 10ஆம் திகதிகளில் மகளுடன் குடும்பத்தினரை தொலைபேசியில் பேசிக்கொள்ளலாம் என வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் குடும்பத்திடமும் தொலைபேசியில்லை. சிறுமியிடமும் தொலைபேசியில்லை. குறிப்பிட்ட நாளில் சிறுமியின் குடும்பத்தினரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வீட்டிலுள்ள ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு சிறுமி மிஸ்ட் கோல் ஏற்படுத்திய பின்னர் குடும்பத்தினர் அழைப்பேற்படுத்தி பேசுவார்கள்.

கடந்த இரண்டு மாதங்களாக ஆசிரியர் ஒருவரின் தொலைபேசி மூலம் மகளுடன் கதைத்ததாகவும் அதன்பின்னர் ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி மகள் தன்னுடன் கதைப்பார் எனவும் தாயார் குறிப்பிட்டார்.

இனி சிறுமியின் மரணம் தொடர்பில் தாயார் கூறியவற்றை பார்க்கையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சிறுமியின் கால்கள் இரண்டும் தரையில் காணப்பட்டன. இன்னும் குறிப்பாக சொல்வதெனில் சிறுமியின் உயிரற்ற உடலின் கழுத்தில் தூக்கு மாட்டிய துணி காணப்பட்டது.

சிறுமியின் இரண்டு முழங்கால்களும் தரையில் முட்டிக் கொண்டிருந்தன. தமது மகளின் சடலமாக காணப்பட்ட போது, முழங்கால்கள் தரையில் ஊன்றியிருந்ததன் அடிப்படையில், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குறிப்பிட்டனர்.

கடந்த 23ம் திகதி தான் விறகு கட்டச் சென்ற இடத்தில் தனது தம்பி விறகு கட்டிய அக்காவிடம் தொலைபேசியில் சொன்னதன் பிற்பாடே தான் உடனடியாக பதறியவாறு ஓடிவந்ததுடன் அங்கு நின்றவர்களது உதவியோடு சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சென்றேன். அங்கு சென்ற போது நான் பிள்ளையை பார்க்கவில்லை.

அதேவேளை அங்கிருந்த வீட்டுக்காரியிடம் ஏன் என்ன நடந்தது எனவும் எனக்கு உடனடியாகவே போனில் கூறியிருக்கலாமே என தான் கேட்டதற்கு ‘லூசுப் பெட்டை என்னவெல்லாம் செய்திருக்கால் தெரியுமோ என கூறியபோது என்ன லூசுபெட்டை என்கிறாய் என குறித்த வீட்டுக்காரியை பேசியதாக குறித்த சிறுமியின் தாயார் தெரிவித்தார்.

என்ன நடந்தது என கூறுமாறு வீட்டுக்காரியிடம் சிறுமியின் தாய் வினவியபோது அவர்கள் வாய் திறந்து எதுவுமே சொல்லவில்லை. அதேவேளை தாங்கள் விட்டுட்டு செல்லும் போது குறித்த சிறுமி பாண் சாப்பிட்டதாகவும் கூறினார்கள்.

அதேவேளை தன்னுடைய மகளின் தலையில் புழுதி படிந்திருந்தாகவும் அவர் உள்ளாடைகள் எதுவும் இல்லாமல் தனியே ஒருசட்டை மாத்திமே அணிந்த நிலையில் தனது மகளின் சடலத்தை பார்த்ததாகவும் வழமையாக தனது மகள் உள்ளாடைகள் இன்றி இருப்பதில்லை என்றும் உறுதிபட கூறுகின்றார்.

நடந்த சம்பவத்தை தனக்கு 3.30 தான் அறிவித்ததாகவும் அதற்கு முதல் இரு தடவை அழைப்பு எடுத்தும் சொல்லவில்லை எனவும் கூறியதற்கு வீட்டுக்கார பெண்மணி “தங்களுக்கு ஏற்பட்ட பதற்றம் காரணமாகவே சொல்லவில்லை” எனவும் தெரிவித்ததாகவும் சிறுமியின் தாயார் தெரிவித்தார்.

மேலும், மகளில் சடலத்தை பெற்றுகொண்ட பின்னர் வழக்கு நடைபெறுவதால் சடலத்தை புதைக்கவேண்டுமா என மரணவிசாரணை அதிகாரியிடம் கேட்டபோது “வழக்கிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை நீங்கள் விரும்பினால் சைவ முறைப்படி எரிக்கலாம்” என்று கூறியதாலே தான் தாம் எரித்ததாகவும் சிறுமியின் தாயாரும் மாமன்முறை உறவினரும் கூறுகின்றார்.

அதேவேளை இரண்டு இலட்சம் பணத்தை தாம் வாங்கியதாகவும் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனவும், மரணவிசாரணை அதிகாரி, “உயிரிழந்த பிள்ளையை எரிக்கப்போகின்றீர்களா தாக்கப்போகின்றீர்களா” என கேட்டபோது நாங்கள் சைவம் என்று கூறியதற்கு அப்படி என்றால் நீங்கள் சைவமுறைப்படி செய்யுங்கள் என தெரிவித்தார்.

அதேவேளை சைவமுறைப்படி செய்தால் வழக்காடலாமா என தனது மாமா கேட்டபோது வழக்குக்கும் இதற்கும் சம்பந்தமில்லை வழக்கு வழக்குத்தான் நீங்கள் உங்கள் பிள்ளையை விரும்பியபடி செய்யுமாறும் 85,000 பிள்ளை வேளை செய்த காசு, அதைவிட செத்த வீட்டிற்கென 2 இலட்சம் ரூபாவும் வேண்டித் தந்திருப்பதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்ததாக தாயார் தெரிவித்தார்.

தமது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் எமக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றே தயார் கண்ணீர் மல்க கோரியுள்ளார்.

வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி எல்லா றிப்போட்டையும் பதிவு செய்து முடிவடைந்த பின்னர் கூறியிருந்தார் நீங்கள் எனி சிறுமியை கொண்டுபோகலாம் என தெரிவித்தார்.

அதற்கு நாங்கள் சிறுமியை தாக்கப்போகின்றோம் என கூறியபோது, இல்லை நீங்கள் உங்கள் சமய முறைப்படி எரிக்கலாம் என தெரிவித்தார். அதன் பின்னரே நாம் நவாலி வழுக்கையாறு இந்து மயானத்திற்கு கொண்டு வந்து தகனம் செய்தோம் எனவும் மாமனார் தெரிவித்தார்.

இதேவேளை சிறுமி வேலை பார்த்த இடத்தில் வயது முதிர்ந்த தம்பதிகள் மற்றும் அவர்களின் மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகள் வசிக்கின்றனர்.

குறித்த வீடு வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது. இருப்பினும் தற்போது அங்கு குறித்த குடும்பம் வாடகை அடிப்படையில் குடியமர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமியின் மரணத்தின் பின்னர், வடக்கு மாகாண ஆளுநர் அதிகாரிகளை அழைத்து சிறுமியை வேலைக்கு அனுப்பியது தொடர்பில் ஆராயுமாறு பணித்திருந்தார்.

அதேவேளை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் சென்று கள ஆய்வை மேற்கொண்டிருந்த போதும், அவர்களுக்கு சிறுமியை பணிக்கு அமர்த்திய விடயம் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயத்தை அறிந்த அயலவர்கள் யாராவது தமக்கு தகவல் தந்திருந்தால் உடனடியாக தாம் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

இருப்பினும் இதுதொடர்பாக பொலிஸாரிடம் மேலதிக விடயங்கள் அறிய முற்பட்ட போது, விசாரணை முடிவடையும் வரை தகவல்களை வழங்க மறுத்துவிட்டனர்.

எனினும், இந்த மரணம் தொடர்பில் செய்தி வெளிட்ட சில ஊடகங்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor