துணியைப்போல் காய்ந்துபோன துவைக்கும் தொழிலாளர்கள்!

சுந்தரம்பிள்ளை ராஜேஸ்கரன்  (S.R.Karan) 

‘உதவியும் இல்லை, உரிமையும் இல்லை அநாதைகளாக அலைகிறோம்’

‘செய்யும் தொழிலை வெளியில் சொல்ல முடியவில்லை: மாற்றுத் தொழிலுக்கு மாறுமாறு பிள்ளைகள் எம்மிடம் கெஞ்சுகின்றனர்’

‘எங்களுடன் எல்லாம் முடிந்துவிடும்; பரம்பரையைப் பாதுகாக்க யாரும் இல்லை. விரும்பவும் இல்லை’

இலங்கையில் அதிகம் பேசப்படாத கதைகளில் ஒன்று சாதி. இந்தக் காலத்திலும் சாதிப்பாகுபாடு பார்க்கப்படுகிறதா? என்றால் ஆம் நிச்சயமாகப் பார்க்கப்படுகிறது.

நமது நாடு பல் இன கலாசாரங்களைக் கொண்டது. இங்கு சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இதேவேளை, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழர்களும், முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரை சாதிக்கட்டமைப்பு வடக்கில் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் மத்தியிலும், மத்தியில் கண்டிச் சிங்களவர்கள் மத்தியிலும் பெரும் கட்டமைப்பாக இப்போதும் நீறு பூத்த நெருப்பாகக் காணப்படுகிறது.

இப்படி பல பகுதிகளிலும் காணப்படும் சாதியத்தின் தாக்கம், சமூக மற்றும் சமாதானப் பன்மைத்துவத்தை நாட்டின் பல பகுதிகளிலும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

சாதிப்பாகுபாடு காரணமாக புறந்தள்ளி வைக்கப்படும் மக்கள் குழுமம் விளிம்புநிலை மக்களாக எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார சவால்கள் எண்ணிலடங்காதவை.

இயந்திரமயங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் உலகத்தில், இலங்கை முழுவதும் சாதியக் கட்டமைப்பினால் சீர்குலைந்துபோன சலவைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் சமூக, பொருளாதார ரீதியில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்ந்து மாற்றமொன்றை நோக்கிய எதிர்காலத்திற்காக அவர்களை அழைத்துச் செல்வதன் அவசியம் குறித்து ஆராயத் தலைப்பட்டோம்.

வவுனியாவில் உடையினை அயன் (ஸ்திரி) செய்யும் தங்கமணி

‘சாதி பார்க்காதது போல வெளியில் காட்டிக்கொண்டாலும், சாதியை வைத்து நிழல் யுத்தம் ஒன்று நடந்துகொண்டுதான் இருக்கு’ என்று ஆதங்கப்பட்டார் முள்ளியவளை – தண்ணீரூற்று பகுதியில் லோன்றி (ஆடைகள் மினுக்கி கொடுக்கும் இடம்) நடத்திவரும் செல்வராசா மயூரன்.

நாட்டின் பல பகுதிகளிலும் அன்றாடம் உழைத்து வாழ்க்கையை நடத்தும் மக்களாக சலவைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான குடும்பங்களின் வாழ்க்கையில் சமகாலப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஒரு வேளை உணவிற்கே வழியின்றி மாற்றியுள்ளது என்பதுதான் உண்மை. தமது நகைகளை அடைவு வைத்தும் அதிக வட்டிக்கு கடன் பெற்றும் சலவைத் தொழிலாளர்கள் தமது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

‘எங்களை எல்லோரும் ஒதுக்குவதால் சில விடயங்களில் இருந்து நாங்களே ஒதுங்கிக்கொண்டோம்’ என்று புதுக்குடியிருப்பு சந்தியில் லோன்றி வைத்திருக்கும் கந்தசாமி வசீகரன் குறிப்பிடுகின்றார்.

இலங்கையின் சாதியக் கட்டமைப்பிலுள்ள ஏற்றத்தாழ்வுகளால் தொழில்ரீதியாக ஒதுக்கப்பட்டவர்கள், தங்களைத் தாங்களே ஒதுக்கிக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளமையும் நலிவடைந்த அந்த சமூகங்கள் மீதான மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்தின் ஒரு அடிகோல்தான்.

ஒருபுறம் சமூகத்தாலும் மறுபுறம் பொருளாதாரத்தாலும் நசுக்கப்படும் அந்த விளிம்புநிலை மக்களின் கதைகளைத் தேடிய பயணத்தில் பல்வேறுபட்ட தகவல்களை அறிய முடிந்தது.

‘சலவைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழும் கிராமம் என்பதாலேயே 40 வருடங்களுக்கு மேலாக எமது வீதி இன்றுவரை புனரமைப்புச் செய்யப்படவில்லை’ என்கின்றனர் மட்டக்களப்பு -கொக்கட்டிச்சோலையில் வசிக்கும் சலவைத் தொழிலாளர் சமூகத்தினர்.

‘சாவு வீட்டிற்கு வந்தால் 500 ரூபாய் காசு தருவினம். ஆனால் எங்கட வீட்டில சாப்பிட மாட்டினம். நாங்களும் அவர்கள் போல சட்டி, பானையில்தான் சமைக்கிறம்’ – என கவலை வெளியிடுகிறார் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த 70 வயதுடைய வயோதிபப் பெண் கண்மணி தேவராசா.

சலவைத் தொழிலாளர்களின் மூலாதாரமான அயன் பெட்டி

அயன் பெட்டியே பிரதான மூலாதாரமாகிப்போன அவர்களின் வாழ்க்கை வெளித்தெரியாத இத்தகைய சமூக ஒடுக்குமுறைகளால் நசுங்கிப்போயுள்ளது.
எனது பிள்ளை உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றபோதும் சாதிப்பாகுபாடு காரணமாக ஓரங்கட்டப்பட்டார்.

இந்த ஊர் மக்கள் எங்களுக்குத் துரோகம் செய்துவிட்டனர்’ என்கிறார் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த திலகவதி வரதராஜன். அவர் மனதில் சமகாலப் பொருளாதாரச் சுமையையும் தாண்டிய பெரும் சுமையொன்று ஒட்டியிருப்பதை நாம் கண்டுகொண்டோம்.

சலவைத் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் சாதி ரீதியில் கல்வியிலும் மிகவும் ஒதுக்கப்படுகிறார்கள். இலங்கையில் உயர் கல்விப் பீடங்களில் இன்றளவும் சாதியம் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதற்கு ஈழத்து எழுத்தாளர் கே.டானியல் எழுதிய நூல்கள் பெரும் சாட்சிகளாகும்.

https://www.vikatan.com/literature/arts/writer-k-daniels-birthday-special-article

நாட்டின் மத்திய மாகாணத்தில் கண்டியில் பெரும்பாலான சலவைத் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். கண்டி – தெய்யன்னேவல பகுதியில் தனிமையில் வசித்து வரும் சலவைத் தொழிலாளியான 72 வயதுடைய வி.எஸ்.மூர்த்தி சந்தர்ப்ப சூழ்நிலையால்தான் இந்தத் தொழிலுக்கு தான் நுழைய வேண்டி ஏற்பட்டது என்கிறார்.

ஆரம்ப கால கட்டத்தில் இதனால் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இருந்தது என்றும், தற்போது நாட்டின் பொருளாதார நெருக்கடியால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்றும் சொல்கிறார்.

ஒரு நாளை சாப்பாட்டிற்கு கூட வருமானம் போதுமானதாக இல்லை என்றும், நாட்டில் நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால் இலங்கையில் மக்கள் வாழ முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுவிடும் என்றும் மூர்த்தி தெரிவிக்கிறார்.

கண்டி – தெய்யன்னேவல பகுதியில் தொழிலில் ஈடுபடும் சலவைத் தொழிலாளி வி.எஸ்.மூர்த்தி.

‘சாதி அடிப்படையில் சலவைத் தொழிலாளர்களாக நாங்கள் இருக்கின்றோமா என்பது எனக்குத் தெரியாது. எனது தந்தையும் தாயும் இந்தத் தொழிலைத் தான் செய்தார்கள். நானும் அவர்கள் வழியைப் பின்பற்றி சலவைத் தொழிலாளியாக காலத்தை கடத்தி வருகின்றேன்.

அரசாங்க உதவித் திட்டங்களோ, அரசியல்வாதிகள் மூலமான உதவிகளோ எதுவும் கிடைப்பதில்லை. சமுர்த்தி பதிவும் இல்லை, வீடும் இல்லை, யாரும் இல்லை’ என்று கூறியபடி மாலை நேர வழிபாட்டிற்கான ஆயத்தங்களில் இறங்கினார் வெங்கடாச்சலம் மூர்த்தி.

தாம் இத்தொழிலைச் செய்வதால் தங்கள் பிள்ளைகளுக்குத் துளியவும் விருப்பமில்லை என்று கூறும் தன்னை அடையாளப்படுத்த விரும்பாத கண்டியில் வசிக்கும் பெண்ணொருவர், இந்தத் தொழிலையும் கைவிட்டு விட்டு எவ்வாறு வாழ்க்கையை கொண்டு நடத்துவது என்ற அச்சத்தால் சலவைத் தொழிலை செய்து வருகிறோம்’ என்றும் குறிப்பிடுகிறார்.

பாடசாலைக்குச் செல்லும் தம் பிள்ளைகள் இத் தொழிலை நிறுத்தி வேறு தொழில்களைச் செய்வதற்கு அழுத்தம் கொடுத்துவருவதால் தமக்கு சலவைத் தொழில் மீது விருப்பம் இல்லை என்றும் அவர் கவலையோடு தெரிவிக்கிறார்.

கண்டி இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள பிரதான நகரமாகும். அவ்வப்போது ஏற்படும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் இவர்கள், கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து தாம் மீள்வதற்கு முன்பதாக சமகாலப் பொருளாதாரத் தாக்கம் வந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

‘சலவை செய்வதற்காக வாங்கி வைத்திருந்த இயந்திரம் வீட்டுக்குள் புகுந்த ஆள் உயரமளவிற்கான வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்து விட்டது’ என்று கூறிய குறித்த பெண் தாம் திட்டமிட்டு சமுர்த்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

கண்டி மாநகர சபையின் முன்னாள் தினக்கூலிப் பணியாளரான நாகலிங்கம் பாபு, தனது தந்தை தொழில் செய்த அயன் பொக்ஸை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒருவர் என்பதுடன் அதன் பெறுமதி ‘தங்கத்திற்கு நிகர்’ என்றும் கூறுகிறார்.

தங்கத்திற்கு நிகரான அயன் பெட்டி

கைபிடி இன்றி நீண்ட காலத்திற்கு முன்பே பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்டபோதும் நாகலிங்கத்தின் குடும்ப சொத்தாக – தமது பரம்பரையின் குறியீடாக குறித்த ஆடைகள் மினுக்கி பெட்டியை பேணிப் பாதுகாத்து வருவதை பாபு குடும்பத்தினர் வெளிப்படுத்தினர்.

கண்டியைச் சேர்ந்த 60 வயதுடைய விஜயலக்ஷ்மி சரவணன் என்ற பெண், கணவன் உயிரிழந்த நிலையில் தனது மகள் மற்றும் மருமகன், பேரப்பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். கணவன் உயிரிழந்த நிலையில் வறுமையோடு போராடிக்கொண்டிருக்கிறார் விஜயலக்ஷ்மி சரவணன். தனது வருமானத்திற்காகவும் பரம்பரை தொழில் என்ற அடிப்படையிலும் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவரின் குடும்பத்திலும் இவருக்குப் பின்னர் யாரும் சலவைத் தொழிலில் ஈடுபடவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கண்டியிலுள்ள சலவைத் தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பக்கியவத்தயை (துணி துவைக்கும் இடத்தை) காண்பித்த 70 வயதுடைய சம்பங்கி சஞ்சித்குமார என்ற முதியவர், ‘தமது உழைப்பும் தொழில் உரிமையும் இவ்வாறுதான் சுரண்டப்படுகின்றது’ என்பதை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார்.

‘ஆரம்ப காலத்தில் சலவைத் தொழிலாளர்கள் மட்டும் வாழ்ந்து வந்த பகுதியில் தற்போது நாங்கள் தொழில் செய்ய முடியாதவாறு ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து விட்டன. பல இடங்கள் மாற்றி எமை இங்கு கொண்டுவந்து விட்டுள்ள போதிலும் இங்கு தொழில் செய்யவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இயற்கையாக கிடைத்த நீரில் தேவைக்கு ஏற்ற அளவில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த எம்மை ஒரு இடத்தில் தொட்டி அமைத்து குழாய் மூலம் நீர் தந்து அதற்கு கட்டணம் அறவிட்டு எமது வருமானம் பெருமளவில் சுரண்டப்படுகின்றது’ என்றும் அவர் கூறினார்.

‘எங்களுடன் சலவைத் தொழில் காணாமல் போய்விடும். சிங்களவர்களின் ஆக்கிரமிப்பு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களாலும் எமது தொழில் நிலம் அபகரிக்கப்பட்டு வருகின்றது. எங்களுடன் எல்லாம் முடிந்து விட்டது’ என்கிறார் சம்பங்கி சஞ்சித்குமார.

சலவைத் தொழிலாளியான மோகனகுமார் என்பவரை திருமணம் செய்ததால் அவரது தாய், தந்தை, சகோதரர்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட அங்கம்மா வவுனியா நெளுக்குளத்தில் சலவைக் கடை நடத்தி வருகிறார்.

‘தாய், தந்தை, சகோதரர்கள் என்னைப் புறக்கணித்தபோதும் கணவன் மோகனகுமார் சிறந்த ஒரு வாழ்க்கைத் துணையாக இருந்தார்’ எனக் குறிப்பிடும் அங்கம்மா யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒரு உயர்சாதிப் பெண்ணாவார்.

தனது வீட்டுக்கு தொழில் நிமித்தம் ஆடை பெற்றுக்கொள்ள வந்த தனது கணவரில் தான் காதல் கொண்டதால் பல எதிர்ப்புகளுக்கு முகம்கொடுத்ததாகவும், சாதியக் கட்டமைப்பு என்பது ஆழமான ஒரு வேர் போன்றது என்றும் அங்கம்மா குறிப்பிடுகிறார்.

வவுனியாவில் வறுமையோடு போராடும் அங்கம்மா

வவுனியா நெளுக்குளம் நாலாம் கட்டைப் பகுதியில் வசித்து வரும் சலவைத் தொழிலாளியான 61 வயது தங்கமணி பஞ்சலிங்கம் என்ற வயோதிபப் பெண், வறுமையோடும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தனது மகனின் விடுதலைக்காகவும் போராடி வருவதை அறிந்து கொள்ள முடிந்தது.

‘எனது மகனை விடுதலை செய்வதற்காக போராடி வருகின்றேன். அவரை சென்று பார்ப்பதற்கு தான் எனது வருமானம் அனைத்தையும் செலவு செய்கின்றேன். எனக்கும் உடல்நிலை சரியில்லை. எனது சலவைத் தொழிலில் சிலவேளை சிறுதொகை வருமானம் கிடைக்கும் சிலவேளை ஒன்றும் கிடைக்காமலும் போகும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி எமக்கு அதிக சுமைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் காதில் இருந்த தோட்டை அடைவு வைத்து மகனுக்கு 7000 ரூபாய் பணம் அனுப்பி வைத்தேன். யாருடைய உதவியும் இன்றி தனிமையில் தவித்து வருகின்றேன்’ என்கிறார் அந்தத் தாய்.

பிள்ளையின் விடுதலைக்காக காத்திருக்கும் தமிழ்த் தாய்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சந்தி இரணைப்பாலை வீதியில் தனது 3 பிள்ளைகளுடன் வசித்துவரும் நிலையில சலவைத்தொழிலாளியான 42 வயதுடைய கந்தசாமி வசீகரன்.

சலவைத் தொழிலில் போதிய வருமானம் இன்மையாலும், தனது பிள்ளைகள் சலவைத் தொழிலில் ஈடுபடுவதை விரும்பாததாலும் இத்தொழிலிருந்து விலக முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

‘பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு வருமானம் போதுமானதாக இல்லை. தகுதிக்கேற்ற தொழிலை செய்ய வேண்டும் என்றே விரும்புகின்றேன்’ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஒதுங்கிக்கொள்ளும் மனநிலைக்கு வந்துள்ள சலவைத் தொழிலாளி வசிகரன்

‘இங்கு சாதிப்பாகுபாடு பார்க்கப்படுவதால் சில விடயங்களில் இருந்து நாங்களே ஒதுங்கிக்கொண்டு விட்டோம்’ என்று தண்ணீரூற்றில் லோன்றி நடத்திவரும் செல்வராசா மயூரன் தெரிவித்தார்.

சலவைத்தொழிலாளர்களின் தொழிலுக்கான பிரதான நீர் மற்றும் மின்சாரம் போன்றவை சமகாலப் பொருளாதார நெருக்கடியில் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அதனால் தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு மானிய அடிப்படையில் உதவித் திட்டங்கள் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் பொருளாதார ரீதியான அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

கண்டியில் தொட்டி அமைத்து தொழில் செய்யும் சலவைத் தொழிலாளர்கள்

நீர்க்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சலவைத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரி ஒருவரிடம் வினவியபோது (தனது பெயர், பதவி நிலையை வெளிப்படுத்த குறித்த அதிகாரி விரும்பவில்லை) நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் அன்றாடம் உழைத்து வாழ்க்கையை நடத்திவரும் மக்கள், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகமாகவுள்ளன.

நீர்க்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படுவதைத் தவிர வேறுவழியில்லை என்ற அடிப்படையில் தான் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மேல் மட்டத்தில் தான் இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் கரிசணை கொண்டுள்ளோம்.

தற்போது, சில பொருட்கள், சேவைகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. நீர் அத்தியாவசியமானது என்பதால் அரசாங்கம் சில கொள்கை முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. எதுவானாலும் கொழும்பு தான் முடிவு செய்யும். அதனை அமுல்படுத்தும் இடத்தில் தான் நாம் இருக்கின்றோம் – என்றார்.
‘மின்சாரக் கட்டணம் என்பது முன்பு எப்போதும் இல்லாதளவிற்கு அதிகரித்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. இது அரசாங்கம் எடுத்த முடிவு.

நாம் இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். மக்கள் எங்களைத் திட்டித்தீர்க்கின்றனர்’ என்றார்.

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் ஒருவர். (ஊடகங்களுக்கு கருத்துக்கூறும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் தனது பெயர், பணி செய்யும் இடத்தை குறிப்பிட வேண்டாம் என்று குறித்த அதிகாரி கேட்டுக்கொண்டதால் பெயர் மறைக்கப்பட்டுள்ளது).

‘கட்டண அதிகரிப்பு குறித்தோ, குறைப்பு குறித்தோ நாங்கள் முடிவு செய்ய முடியாது. கொழும்பில் எடுக்கப்படும் முடிவுக்கு ஏற்ப செயற்பட வேண்டியுள்ளது. மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளபோதும் இணைப்பு துண்டிப்பு வீதத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. மின்சாரக் கட்டணத்தைப் பார்த்து மக்கள் எங்களைத் திட்டினாலும் உரிய கட்டணத்தை செலுத்துகின்றனர்.

முன்பு நிலுவைப் பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது ஒரு மாதம் தான் வழங்கப்படுகின்றது. இருப்பினும், மின் இணைப்பு துண்டிப்பை மக்கள் தவிர்த்து வருகின்றனர். மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளதால் (சலவைத் தொழிலாளர்கள் உட்பட) சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பின் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவில் முறையிட முடியும்.

எங்களால் அரசாங்கத்தின் கொள்கை முடிவுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. மின் இணைப்புக்களில் ஏதும் கோளாறு ஏற்பட்டால் அதனைத் திருத்திக் கொடுப்பது, மின்சாரக் கட்டணத்தை அறவிடுவது, இதனைத் தவிர எங்களால் எதுவும் செய்ய முடியாது’ என்கிறார் பொறியியலாளர்.

இதேவேளை சலவைத்தொழிலாளர்கள் மாத்திரமின்றி சாதியத்தின் பெயரில் பாதிக்கப்படும் அனைத்துத் தரப்பினர் குறித்தும் எம்மோடு பேசிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும், பொருளியல் மற்றும் சமூக ஆய்வாளருமான கலாநிதி அகிலன் கதிர்காமர், சாதிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தேவை என்றும், சாதிக்கட்டமைப்பு பற்றி வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றார்.

‘சாதிக்கு எதிராக போராட்டங்கள் தேவை’ – கலாநிதி அகிலன் கதிர்காமர்

‘வடக்கில் யாழ்ப்பாணத்தில் சாதிப்பாகுபாட்டை ஒழிப்பதாக இருந்தால் சமூக மட்டத்தில் பாரிய விழிப்புணர்வு தேவை. நமது நாட்டில் சாதிப்பாகுபாடுகள் பார்க்கப்படும் சந்தர்ப்பங்களில் சட்டத்தை அமுல்படுத்தல் மிகக்குறைவு, இந்நிலை மாற்றமடைய வேண்டும்.

சாதி அடிப்படையில் யாரேனும் பாதிக்கப்பட்டால் அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கலாநிதி அகிலன் கதிர்காமர் வலியுறுத்துகிறார்.

இதேவேளை, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மக்கள் கலந்துரையாடல் திட்டத்தின் தேசிய இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸன், சாதி அடிப்படையில் ஒரு சமூகத்தை ஒதுக்குவது மனித உரிமை மீறலாகும் என்று குறிப்பிடுகின்றார்.

சாதி குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமென்கிறார் அன்டனி ஜேசுதாஸன்

‘சகல விதமான வேறுபாடுகளையும் நாம் எதிர்க்கின்றோம். சாதி, இன, மொழி அடையாளத்தை வைத்து மக்கள் ஒதுக்கப்படுவதை நாம் முற்றாக வெறுக்கின்றோம். இனம், மொழி கடந்து அனைத்து மக்களும் சகல வளங்களையும் அனுபவிக்க வேண்டும்.

தொழிலை அடிப்படையாக வைத்து ஒரு மக்கள் குழுமத்தை ஒடுக்குவது மனிதநேயத்திற்கு எதிரான விடயம். எனவே, சலவைத் தொழிலாளர்களைச் சாதி அடிப்படையில் பார்த்து புறக்கணிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் அவ்வாறு சாதியை வைத்து மக்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்குபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். படித்தவர்கள் மட்டத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

சாதி அடிப்படையில் மக்களை பிரித்து பார்க்காது அவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட வேண்டும். திருமணத்திற்கு வரன் தேடும்போது சாதி குறிப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும், அத்துடன் மதத்தலங்களில் சாதிக்கு இடம்கொடுக்கக்கூடாது’ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சமூகத்தில் விளிம்புநிலை மக்கள் குழுமமாகக் காணப்படும் சலவைத் தொழிலாளர்களின் சமூக அந்தஸ்தும், பொருளாதாரமும் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் நலிவடைந்த இக்குழுமத்தினரின் பொருளாதாரப் பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படவேண்டியது அவசியம்.

சலவைத் தொழிலாளர்களும் மனிதர்களே. அவர்களைத் தொழில் அடிப்படையில் பாகுபாடுகள் பார்த்து புறக்கணிப்பது நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு பாகுபாடு பார்க்கப்படும் சந்தர்ப்பங்களில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு சாதி வெறியர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், இந்தத் தலைமுறையுடன் சலவைத் தொழிலை கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள குடும்பங்கள் தொடர்பில் உரிய கணக்கெடுப்புக்களை மேற்கொண்டு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்ட மக்களினதும், சமூக ஆர்வலர்கள் மற்றும் புத்திஜீவிகளின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

Recommended For You

About the Author: S.R.KARAN