நல்லிணக்கத்தை வாழவைக்கும் வழிபாட்டுத் தலங்கள்!

தர்மகுலசிங்கம் தர்மேந்திரா

இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்தது. அது வரையில் இந்நாட்டு மக்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் ஒன்றுபட்டிருந்தனர் என்றும் பிரித்தானியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக இனத்தால், மொழியால், சமயத்தால், கலாசாரத்தால், பண்பாட்டால் வேறுபட்ட மக்கள் கூட்டங்களாகப் பிரிந்து நிற்கத் தொடங்கினர் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அரசியல், கல்வி, உயர் கல்வி, தொழில்வாய்ப்பு போன்ற விடயங்களில் இது பிரதிபலிக்கத் தொடங்கியதால் சிறுபான்மைத் தமிழர்கள் எதிர்ப்புக் காட்டத் தலைப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து கடவுள்தான் தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா சொல்கின்ற அளவுக்கு நிலைமை மாறியது. 1970 களில் தமிழ் இளையோர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். 1983 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி இரவு தலைநகர் கொழும்பில் கறுப்பு ஜூலைக் கலவரம் வெடித்தது.

மற்றொரு சிறுபான்மைச் சமூகத்தினரான முஸ்லிம்கள் சந்தர்ப்பவாதிகளாக சிறுபான்மைத் தமிழர்களாலும், பெரும்பான்மை சிங்களவர்களாலும் உணரப்பட்டனர். உள்நாட்டு யுத்தம் எல்லா இன மக்களையும் பலியெடுத்தது.

­­­இடையிடையே மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் நீடித்த சமாதானத்துக்கு வழி கோலவில்லை. மாறாக மூன்று தசாப்த காலங்களுக்கு மேல் யுத்தம் நீடித்தது. யுத்த காலப் பாதிப்புகளுக்கு உச்சம் வைத்தது போல 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால்ப் பேரழிவு இடம்பெற்றது. அதற்கு மேல் யுத்தம் நீடிக்கவில்லை என்றாலும் அதன் பாதிப்புகள், தாக்கங்கள், எச்சங்கள் இதுவரையில் தொடர்கின்றன. மறுபுறத்தில் இனத்தால், மொழியால், சமயத்தால், கலாசாரத்தால், பண்பாட்டால் வேறுபட்ட மக்கள் இலங்கையர்களாக மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்று சமாதானப் பிரியர்கள், தேசப் பற்றாளர்களால் தொடர்ந்தேச்சையாக அன்று முதல் இன்று வரை வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

வேற்றுமையில் ஒற்றுமை காணுதல் என்ற அடிப்படையில் பொதுவாக மனிதர்களாகவும், விசேடமாக இலங்கையர்களாகவும் இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும். அப்போதுதான் இந்நாடு சுபீட்சம் அடையும் என்பதுடன் நாட்டு மக்கள் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ வழி பிறக்கும். எனவேதான் புரிந்துணர்வு, சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், சக வாழ்வு, சமாதானம் போன்ற உயரிய விழுமியங்களைக் கைக்கொண்டு பின்பற்றுவதன் மூலம் ஏற்படுத்தப்படுகின்ற சமூக நல்லிணக்கம் காலத்தின் தேவையாக கண்முன் நிற்கின்றது. அதே போல கடந்த கால அனுபவங்களை படிப்பினைகளாகக் கொண்டு வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, நம்பிக்கையீனம், வஞ்சனை போன்ற விசமத்தனங்கள் களையப்படுதல் வேண்டும்.

சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கி வளர்ப்பதிலும், பேணிப் பாதுகாத்து நிலைநாட்டுவதிலும் சமயங்கள் மிகப் பிரதான பங்கு வகிக்கின்றன. சமயங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டவையாக இருக்கலாம். ஆனால் எல்லா சமயங்களும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நிற்கின்றன. இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க என்று இந்து சமயம் வாழ்த்துகின்றது. மனிதர்களின் இதயங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள் என்று புத்தபிரான் போதித்திருக்கிறார். இறந்த யூதர் ஒருவரின் உடலத்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினார் நபிகள் நாயகம். உன்னை போல் அயலவனையும் நேசி என்று கிறிஸ்தவ சமயம் போதிக்கின்றது. சமயத் தலங்கள் சமூக நல்லிணக்கத்துக்கான போதனைக் களங்கள் ஆகும். வழிபாட்டுத் தலங்கள் வழிகாட்டிகள் ஆகும்.

இந்து – பௌத்த நல்லிணக்கம்

புத்தருக்குப் பூசை செய்யும் இந்து குரு

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு தமிழ்க் கிராமத்தில் பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ளது அரசடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம். விநாயகர் ஆலய வளாகத்தில் அரசமர நிழலில் புத்த பகவான் ஆலய நிர்வாகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டுக் காட்சி கொடுக்கின்றார். பிரதான வீதிக்கு அருகில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இவர்களுடைய வழிபாட்டுக்காகவே இந்த ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது.

‘ பிள்ளையாரை வழிபட வருகின்ற இந்துக்கள் புத்த பகவானையும், புத்த பகவானை வழிபட வருகின்ற பௌத்தர்கள் பிள்ளையாரையும் வழிபடுகின்றமையை கண்கூடாக காண முடிகின்றது, அதே போல தமிழ் இந்துக்களும், சிங்கள பௌத்தர்களும் இணைந்து வெசாக், போசன் போன்ற பண்டிகைகளை இங்கு கொண்டாடுகின்றனர் ‘ என்று இங்கு காவலாளியாகக் கடமையாற்றுகின்ற ஆறுமுகம் தெரிவிக்கின்றார்.

இரத்மலானையில் அமையப்பெற்றுள்ளது நந்தீஸ்வரம் ஆலயம். பழம்பெரும் ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்று. போர்த்துக்கேயரால் 1518 இல் நிர்மூலம் செய்யப்பட்டது. அங்கு பூசைகள் நடத்தி வந்த குப்புசாமி குருக்களையும், குடும்பத்தினரையும் அந்த இடத்திலேயே படுகொலை செய்தனர். குருக்களின் ஒரு மகனை பிடித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து பெர்னான்டோ என்ற சிங்களவர் வழிபாட்டு இடத்தை பராமரிக்கத் தொடங்கினார்.

நந்தீஸ்வரம் ஆலயம்

இவருடைய வழித் தோன்றல்களே தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக இந்த ஆலயத்தைப் பராமரித்து வருகின்றனர். சிவன் ஆலயம் இருந்த அதே இடத்தில் 1717 இல் பௌத்த வழிபாட்டுத் தலத்தை ஒத்ததாக முருகன் ஆலயம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

கதிர்காம முருகன் ஆலயத்தை ஒத்ததாக இங்கு பூசைகள் நடத்தப்படுகின்றன. இதையும் பாரம்பரியமாகச் சிங்களவர்களே நடத்தி வருகின்றனர். இந்நிலையிலேயே ‘கொனாபெந்தி கத்தரகம தேவாலய’ என்றும் ‘கோணா கோயில்’ என்றும் பௌத்த சிங்களவர்கள் மத்தியில் நந்தீஸ்வரம் புதிய பெயர்களைப் பெற்றது.

பெர்னான்டோ குடும்பத்தின் அனுமதியுடன் 1980 இல் சிவன் ஆலயம் அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. 2005 இல் சிவன் கோவில் நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று ஆலய வளாகத்தில் சிறிய விகாரை ஒன்றும் காட்சி அளிக்கின்றது.

தமிழ் இந்துக்களுக்கும், சிங்கள பௌத்தர்களுக்கும் இடையிலான நல்லிணக்க உறவுப் பாலமாக நந்தீஸ்வரம் மிளிர்கின்ற அதேவேளை வடக்குக்கும், தெற்குக்கும் இடையிலான தொடர்புப் பாலமாகவும் பரிணமிக்கின்றது. வட மாகாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இந்துக்கள் நந்தீஸ்வரத்தின் வளர்ச்சியிலும், எழுச்சியிலும் கூடுதல் பங்களிப்புகளை வழங்கி வருகின்றமையை இன்றைய நாட்களில் அவதானிக்க முடிகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ-9 பிரதான வீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமையப்பெற்றுள்ள முறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் வடக்குக்கும், தெற்குக்கும் இடையிலான பிரசித்தி வாய்ந்த உறவுப் பாலம் ஆகும்.

‘இவ்வீதி வழியாக பயணிக்கின்ற வாகனங்கள் அனைத்தும் தரித்து நின்று முறிகண்டி பிள்ளையாரை தரிசித்துச் செல்கின்றன. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல காக்கும் தெய்வமாக முறிகண்டி பிள்ளையாரைப் பயணிகள் நம்பி வழிபடுகின்றார்கள், அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக முறிகண்டிப் பிள்ளையார் விளங்குகின்றார்’ என்று இப்பகுதியில் கச்சான் விற்பனை செய்யும் ஜெனிற்றா கூறுகின்றார்.

முறிகண்டிப் பிள்ளையார்

இந்து – இஸ்லாமிய நல்லிணக்கம்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் இந்து – இஸ்லாமிய நல்லிணக்கத்துக்கு முன்னுதாரணமாக இப்பிரதேசத்தை சேர்ந்த பொதுநலச் செயற்பாட்டாளர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் அடிக்கடி வலியுறுத்திக் கூறுகின்ற ஒரு விடயத்தைப் பதிவு செய்ய வேண்டி இருக்கின்றது.

‘சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துகின்ற வகையில் அக்கரைப்பற்று பத்திரகாளி அம்மன் கோவில், அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு ஒரே நாளில் அடிக்கல்கள் நாட்டப்பட்டன.

இவை இரண்டும் நூற்றாண்டு காலப் பழைமை வாய்ந்தவை மட்டுமல்ல இப்பிரதேசத்தின் மிகப் புராதன வழிபாட்டுத் தலங்களாகவும் உள்ளன’ என்று குறிப்படுகின்றார். பத்திரகாளி அம்மன் ஆலய அடிக்கல் நாட்டு விழாவில் இஸ்லாமியத் தலைவர்களும், பெரிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழாவில் இந்து சமயக் குருமாரும் பங்கேற்றுள்ளனர்.

”கல்முனைக்குடியில் அமைந்துள்ள கடற்கரைப் பள்ளிவாசல் உற்சவத்தில் இந்துக்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றுகின்றார்கள், சாம்பிராணி ஏற்றியும், உப்புக் காணிக்கை கொடுத்தும் நாகூர் ஆண்டகையை வழிபடுகின்றார்கள்” என்று ஓய்வு நிலை ஆசிரியரும், ஊடகவியலாளருமான ஜுல்பிகா ஷெரிப் குறிப்பிடுகின்றார்.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி வாய்ந்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் பட்டாணித் திருவிழா தமிழ் – முஸ்லிம் நல்லிணக்கத்தை பறைசாற்றி நிற்கின்றது. 1990 வரை முஸ்லிம்களே பட்டாணித் திருவிழாவை நடத்தி வந்துள்ளனர்.

இப்போது தமிழர்களே நடத்துகின்றபோதிலும் பட்டாணித் திருவிழா என்கிற பெயரிலேயே இத்திருவிழா தொடர்கின்றது. மட்டக்களப்பில் தமிழர்களுக்கும், திமிலர்களுக்கும் இடம்பெற்ற யுத்தத்தில் தமிழர்களுக்குப் பட்டாணி முஸ்லிம்கள் உதவி செய்தனர்.

பட்டாணிகள் மட்டக்களப்பிலேயே குடியேறி முக்குவப் பெண்களை மணந்து வாரிசுகளை பெருக்கிக் கொண்டனர் என்பது வரலாறு. பட்டாணித் திருவிழா தமிழ் மக்களின் நன்றியறிதலையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. ”தான்தோன்றீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்டபோது அவருடைய மூதாதையர்கள் தோணிகளில் செங்கற்களை அன்பளிப்பாக அனுப்பியுள்ளனர்” என்று முன்னாள் அமைச்சரும், புத்திஜீவியுமான ஏறாவூரைச் சேர்ந்த பஷீர் சேகு தாவூத் தெரிவிக்கின்றார்.

இந்து – கிறிஸ்தவ நல்லிணக்கம்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்துக்கு இந்துக்கள் திரண்டு சென்று வழிபடுகின்றனர். செவ்வாய், ஞாயிறு தினங்களில் கூடுதல் இந்துக்களை இங்கு காணலாம். அன்னை மரியாளிடம் கவலைகளைச் சொல்லிக் கதறுகின்றனர்.

இந்துக்களின் தாய்த் தெய்வ வழிபாட்டுடன் இது பொருந்தி நிற்கின்றது.மேரியையும், மாரியையும் ஒன்றாகக் காண்கின்றனர். குழந்தை இயேசுவை முருகனாகக் காண்கின்றனர். இதே போலவே பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயம் யாழ். மாவட்ட இந்துக்களோடு பின்னிப்பிணைந்து காணப்படுகிறது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம்

பௌத்த – இஸ்லாமிய நல்லிணக்கம்

குருணாகல் மாவட்டத்தில் நகரத்தின் மத்தியில் யானை படுத்திருப்பது போல குன்று ஒன்று காணப்படுகிறது. வத்ஹிமி அல்லது கலே பண்டார என்று அழைக்கப்படுகின்ற இஸ்லாமிய மன்னன் ஒருவர் குருணாகல் இராச்சியத்தை குறுகிய காலங்கள் ஆட்சி செய்துள்ளார். இவரின் இயற்பெயர் குர்ஷான் ஷெய்யது இஸ்மாயில் என்பதாகும். இவருடைய ஆட்சிக் காலம் 1288-1290 ஆக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

”முதலாம் புவனேகபாகு மன்னனுக்கும், அவருடைய முஸ்லிம் மனைவிக்கும் பிறந்தவர்தான் இந்த இஸ்லாமிய மன்னன், இவர் சதி மூலமாக யானைக் குன்றில் இருந்து வீழ்த்திக் கொல்லப்பட்டார், மன்னன் இறந்த பின்னர் அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாக மக்கள் நம்பினர், தினமும் குதிரையில் நகர் வலம் வருவதை மன்னன் வழக்கமாகக் கொண்டிருந்தார், இறந்த பின்னரும் அவர் குதிரையில் நகர் வலம் வருகின்றார் என்று மக்கள் நம்பினர், எனவே இவரைக் காவல் தெய்வமாகப் பிரகடனம் செய்தனர்” என்று இப்பிரதேசத்தைச் சேர்ந்த உபுல் குமார தெரிவிக்கின்றார்.

தெய்வமாக்கப்பட்ட முஸ்லிம் மன்னன்

முஸ்லிம் மன்னனின் உடல் குருணாகல் கச்சேரி வீதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ‘கலே பண்டார அவுலியா’ என்று முஸ்லிம்கள் இவரை அழைக்கின்றார்கள். சிங்களவர்கள் ‘கலே பண்டார தெய்யோ’ என்று அழைக்கின்றார்கள்.

இவருக்கான ஷியாரத்தை ( வழிபாட்டுத் தலத்தை ) முஸ்லிம்கள் மாத்திரம் அல்லர், ஏராளமான சிங்களவர்களும் தரிசித்து வழிபடுகின்றனர். மேலும் சிங்கள மக்கள் இவருக்கு கலே பண்டார தேவாலய என்கிற பெயரில் தனியாக வழிபாட்டுத் தலம் அமைத்து வழிபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்ப் பிரதேச செயலகப் பிரிவில் ஜின்னா நகரில் பௌத்தத் தூபி 1990 களில் படையினரால் நிர்மாணிக்கப்பட்டு 20 வருட காலங்கள் வழிபடப்பட்டது. இஸ்மாயில் மஹ்ரூப் என்பவரின் வீட்டை அண்டி நிலைகொண்டிருந்த படையினரே இத்தூபியை நிர்மாணித்து வழிபட்டு வந்த நிலையில் இப்பகுதியை விட்டு வெளியேறத் தயாரானபோது தூபியை அகற்ற முற்பட்டனர்.

ஆனால் தூபியை அகற்ற வேண்டாம் என்று படையினரைக் கேட்டுக்கொண்ட மஹ்ரூப் அவராகவே தூபியைப் பராமரிக்கின்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தூபியை இவரும், இவரின் மனைவியும் கண்ணும் கருத்துமாக பராமரித்து வருகின்றனர்.

”இப்போது இப்பகுதியில் சிங்களவர் யாருமே கிடையாது, உண்மையான முஸ்லிமாக இருந்து ஏனைய சமயத்தவர்களின் உணர்வுகளை மதிக்கின்ற காரணத்தால்தான் பௌத்தத் தூபியை பராமரித்துப் பாதுகாத்து வருகின்றேன்“ என்று 62 வயதுடைய மஹ்ரூப் தெரிவிக்கின்றார்.

பௌத்தத் தூபியை பராமரித்துப் பாதுகாக்கும் முஸ்லிம் தம்பதி

சர்வ சமய வழிபாடுகள்

இந்நாட்டின் இந்துக்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய நான்கு சமயத்தவர்களும் தரிசித்து வழிபடுகின்ற புனிதத் தலமாக உலகப் பிரசித்தி பெற்ற சிவனொளிபாத மலை விளங்குகிறது. பௌத்தர்கள் ‘ஸ்ரீபாத’ என்றும் இஸ்லாமியர்கள் ‘ஆதாமின் மலை’ என்றும் இதை அழைக்கின்றனர்.
சர்வ சமய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக கதிர்காமம் விளங்குகின்றது. நாடு பூராவும் இருந்து மக்கள் வருடாவருடம் கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை செல்வது வழக்கம்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள கன்னியா வெந்நீரூற்றுப் புனித பிரதேசமும் சர்வ சமய வழிபாட்டுத் தலமாகும். வெந்நீரூற்றில் மக்கள் நீராடுவார்கள்.
மன்னார் மாவட்டத்திலுள்ள மடு தேவாலயமும் சர்வ சமய வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது. மடு மாதா உற்சவத்தில் வருடாவருடம் பல இலட்சம் மக்கள் பங்கேற்பதை அவதானிக்க முடிகிறது.

ஒரு இதயத்தின் நான்கு அறைகளை போல நான்கு வகையான சமய தலங்களும் விளங்குகின்றன. அவை அவ்வாறு இயங்குதல் அவசியம் என்று உணரப்பட்டிருக்கின்றது. ஊக்குவிக்கப்படுகின்றது. உண்மையான சமயத் தலைவர்களும், உண்மையான சமயிகளும் ஒருபோதும் சமூகங்களுக்கிடையில் பிணக்கத்தை விதைப்பதே கிடையாது. நல்லிணக்கத்தையே விளைச்சலாகப் பெற வேண்டும் என்பதில் பற்றுறுதியுடன் இருக்கின்றனர்.

ஆனால் சமூகங்களைத் தொடர்ந்தும் பிரித்தாள வேண்டும். அதன் மூலம் சுய இலாபங்களை ஈட்ட வேண்டும் என்ற சிந்தனையில் செயற்படுகின்ற சமூக விரோத சக்திகள் ஒவ்வொரு சமூகத்திலும் ஊடுருவி நிற்கின்றன. அவை சமயங்களின் பெயரால் சமூகங்களைப் பிழையாக வழி நடத்த முற்படுகின்றன.

அப்போதுதான் மதவாதம் தலைதூக்கப் பார்க்கின்றது. மனிதனுக்கு மதம் பிடிக்கக் கூடாது. அதாவது சமய உணர்வு வெறியாக மாறவே கூடாது. ஈஸ்டர் தினத்தில் சஹ்ரான் நடத்திய குண்டு வெடிப்புகளை உதாரணமாகச் சொல்லலாம். போர்க் காலத்திலும், அதற்குப் பின்னரும்கூட சமூக நல்லிணக்க மையங்களான வழிபாட்டுத் தலங்கள் இலக்கு வைக்கப்பட்டுத்தான் உள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம், காத்தான்குடிப் பள்ளிவாசல், நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயம், கண்டி தலதா மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைச் சொல்லலாம். கத்தோலிக்கத் தேவாலயங்கள் மீது சஹ்ரான் நடத்திய தாக்குதல்களையும் சொல்லலாம்.

அதே போல குறிப்பிட்ட சமயத்தின் பெயரால் சமய தலங்கள் மீது நடத்தப்படுகின்ற காணி ஆக்கிரமிப்புகளின் வடிவங்களை ஏற்று கொள்ளவே முடியாது. மேலும் நேர்மறையான எண்ணங்களை காலம் காலமாக சமயத் தலங்கள் ஏற்படுத்தி வருகின்ற நிலையில் எதிர்மறையான எண்ணங்களுக்கு வலுச்சேர்க்க கூடிய காட்சிப்பாடுகள், விடயங்களுக்கு வழிபாட்டு தலங்கள் இடம் அளித்தால் அது சமூக விரோத சக்திகளுக்கு வெற்றியாக அமைந்து விடும். காத்தான்குடி பள்ளிவாசலின் சுவர்கள் இரத்தக் கறை மாறாமல் இப்போதும் காட்சி தர வேண்டிய அவசியம் கிடையாது.

இது ஒட்டுமொத்தத் தமிழர்கள் மீதும் முஸ்லிம்களுக்குக் காழ்ப்புணர்ச்சியை, வெறுப்பை இயல்பாக ஏற்படுத்தித் தூண்டக் கூடியதாகும். அதே போல வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் கோவிலுக்குள் உள்ள நினைவுத் தூபி ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் தமிழர்களுக்குக் காழ்ப்புணர்ச்சியை, வெறுப்பை இயல்பாக ஏற்படுத்தக் கூடியது. சமூக நல்லிணக்க மையங்களான வழிபாட்டுத் தலங்களில் மிரட்டுகின்ற, வெறுப்பூட்டுகின்ற, சந்தேகப்பட வைக்கின்ற காட்சிப்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

காத்தான்குடிப் பள்ளிவாசலின் சுவர்கள்

வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் நினைவுத் தூபி

சமூக நல்லிணக்க மையங்களாக அரசாங்கம் வழிபாட்டுத் தலங்களைப் பிரகடனம் செய்ய வேண்டும். பாடசாலைப் பிள்ளைகளுக்கான பாட விதானங்களில் வழிபாட்டுத் தலங்கள் மூலமான சமூக நல்லிணக்கம் போதிக்கப்படுதல் வேண்டும். குறிப்பாகச் சர்வ சமய வழிபாடும், ஏனைய சமயங்களும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். நாம் இந்த இடத்தில் ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூற வேண்டியுள்ளது.

ஆட்சியாளர்களும் சரி, அரசாங்கங்களும் சரி முன்னுதாரணமாக நடக்க வேண்டியுள்ளது. எந்த சமயத்துக்கும் விசேடமாகவோ, தனித்துவமாகவோ முன்னுரிமை, முதலிடம் வழங்கப்படவே கூடாது. அனைத்து சமயங்களும் சமவுரிமையுடன் நடத்தப்பட வேண்டும். இதற்கு ஏற்றபடி அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும். அரசாங்கத்தின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவுடன் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள் எந்த வடிவத்திலும் இலக்கு வைக்கப்படவே கூடாது.

சமய நிந்தனை உட்பட வழிபாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றங்களாக சட்டப் புத்தகத்தில் மாத்திரம் இருந்தால் போதாது, நடைமுறையில் முறையாக அமுல்படுத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். அதே போல கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளை முற்றாக ஒழிப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்குச் சமயத் தலைவர்கள், சமயிகள், பொதுமக்கள் அடங்கலாக அனைத்துத் தரப்புகளும் அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம். ரி ஹசன் அலி எமக்குக் கருத்து கூறுகையில் வழிபாட்டுத் தலங்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் உணர்ச்சி வசப்பட வைக்கக்கூடியவை, எனவே இவ்விடயத்தில் பொது நல அக்கறையுடன் சம்பந்தப்பட்ட தரப்புகள் நடந்து கொள்ள வேண்டியிருக்கின்றது, சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் சர்ச்சைக்குரிய விடயங்களுக்குத் தீர்வு காண முயற்சிப்பதே சாலப் பொருத்தமானதாகும் என்றார்.

பேராசிரியர் நந்தன விஜேசிங்க

சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்க விவகாரங்களின் துறை சார்ந்த நிபுணரும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியருமான ஷாந்தி நந்தன விஜேசிங்க கருத்துக் கூறுகையில் மதங்கள் நல்லவற்றையே போதிக்கின்றன, மனங்கள்தான் மாற வேண்டியிருக்கின்றது என தெரிவித்தார்.

ஊடகவியலாளர் ரஞ்சித் பெரேரா

கத்தோலிக்கரும், ஆங்கில ஊடகவியலாளருமான ரஞ்சித் பெரேரா ” நல்லிணக்கத்தைப் பற்றி புதிதாக யாரும் இலங்கையர்களுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை, அரசியல்வாதிகள்தான் மக்களைப் பிரித்து வைத்திருக்கின்றனர், அரசியல் நோக்கங்களுக்காக இலங்கையர்கள் பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள், சமயங்கள் மனித மனங்களைப் பக்குவப்படுத்துபவை “ என்றார்.
”சர்வமத வழிபாடு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தி ஒன்றிணைய வைக்கின்றது, எமது சர்வமத பீடத்துக்கு எல்லாச் சமயத்தவர்களும் வருகின்றார்கள், வெளிநாட்டவர்கள்கூட வருகின்றார்கள், யாவருக்கும் புகலிடம் என்பதே எமது மகுட வாக்கியம் ஆகும், முஹமது நபி, புத்தர், யேசு ஆகியோரும் மனித குலத்தை வாழ வைக்கவே தோன்றினார்கள்” என்று தெரிவிக்கிறார் காரைதீவு ஸ்ரீ சிவசக்தி குரு குடைச்சாமி சர்வமத பீடத்தின் ஸ்தாபகரும், தலைவருமான ஜீவாகரன் சுவாமிகள்.

ஜீவாகரன் சுவாமிகள்

வழிபாட்டுத் தலங்கள் மூலமான சமூக நல்லிணக்கத்துக்குச் சவால்களாக இருக்கக் கூடிய விடயங்கள் சூரியனைத் தற்காலிமாக மறைத்து நிற்கின்ற மேகங்களைப் போன்றவை மாத்திரமே. நல்லதோர் வீணை செய்து அதை நலன் கெட புழுதியில் எறிவதுண்டோ என்கிற பாரதியார் பாடலை இத்தருணத்தில் நினைவூட்ட விளைகின்றோம்.

Recommended For You

About the Author: S.R.KARAN