சர்ச்சையை ஏற்ப்படுத்திய குரங்கு ஏற்றுமதி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (19.05.2023) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் விசாரணை

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்ததுடன், இந்த வழக்கு தொடர்பான உண்மைகளை முன்வைக்க திகதியையும் கோரியுள்ளார்.

அதன்படி மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு இலட்சம் இலங்கை குரங்குகளை சீன நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்கு, தடை உத்தரவு பிறப்பிக்குமாறு சுற்றாடல் அமைப்புகளால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுதாரர்களின் கருத்து

இலங்கை வனவிலங்கு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சங்கம், மாத்தறை ஆனந்த சாகர தேரர், ஒட்டாரா குணவர்தன மற்றும் ருக்ஷான் ஜயவர்தன உள்ளிட்ட 27 பேரினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் கடுமையான மிருகக் கொடுமைகள் நடைபெறுவதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், இது வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே சீனாவுக்கு வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும், வனவிலங்குகள் இயக்குநருக்கு உரிமம் வழங்குவதை தடுக்க உத்தரவிடுமாறும் உரிய மனுவில் கோரப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor