வெலிகம அர்பா தேசிய பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் குறித்த 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை கம்பியினால் கடுமையாக தாக்கியதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் காரணமாக மாணவன் மாத்தறை பொது வைத்தியசாலையில் பெற்றோரால் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆசிரியரின் கொடூரமான தாக்குதலால் காயமடைந்த மாணவன் நடந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பெற்றோர் வெலிகம காவல்நிலையம் சென்று தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன்
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மற்றும் அந்த பாடசாலையில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்கும் ஆசிரியரின் மகனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை இடைவேளை முடிந்ததும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவனின் வகுப்பிற்கு வந்து என் மகனை ஏன் அடித்தாய் எனக் கேட்டு மாணவனை வகுப்பிலிருந்து வெளியே இழுத்து கம்பியால் தாக்கியுள்ளார்.
பின்னர் மாணவனை கல்லூரி மைதானத்தை நோக்கி இழுத்துச் சென்றார். அதை பார்த்த மற்றொரு ஆசிரியர், ஆசிரியரின் பிடியில் இருந்து மாணவனை மீட்டுள்ளார்.
இத்தாக்குதல் தொடர்பில் குறித்த ஆசிரியருக்கு எதிராக வெலிகம காவல்துறை மற்றும் பிரதேச கல்வி அலுவலகத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி குறித்த முறைப்பாட்டினை விசாரிப்பதற்காக இரு தரப்பினரும் வெலிகம காவல்துறைக்கு அழைக்கப்பட்டதாகவும் வெலிகம காவல்துறை தலைமையக பரிசோதகர் டி. எம். அபேசேகரவின் பணிப்புரையின் பிரகாரம் காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.