இலங்கையில் பாரிய ஆபத்தாக உருவெடுக்கும் போசாக்கின்மை பிரச்சினை !

  • வீ.பிரியதர்சன்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, எமது கண்ணுக்கு புலப்படாத பல பிரச்சினைகள் நலிவடைந்த அடிமட்ட மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரதானமானது போசக்கின்மை பிரச்சினை.

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள போசாக்கின்மை பிரச்சினையானது எமது எதிர்கால சந்ததியினரை கடுமையாகப் பாதிக்கும் என்பது நம்மில் பலரால் தற்போது உணரப்படாத உண்மையாகக் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தையொன்று 2023 மார்ச் மாதம் 14 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இவ்வாறு கர்ப்பிணித்தாய்மார், பாலூட்டும் தாய்மார் மற்றும் சிறு குழந்தைகள் என பலர் அன்றாடம் போசாக்கற்ற உணவினால் பாதிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றனர்.

தந்தையொருவர் தனது இரண்டு சிறு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடந்த 2023 பெப்ரவரி 6 ஆம் திகதி அரநாயக்க பகுதியில் இடம்பெற்றது.

அதேபோன்று குருவிட்டவில் கடந்த 2023 பெப்ரவரி 18ஆம் திகதி இரண்டு சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவத்தையடுத்து அவர்களின் தாயார் தற்கொலை செய்ய முயற்சித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் கெப்பித்திக்கொல்லாவவில் இன்னொரு தாயார் மார்ச் 5ஆம் திகதி தனது இரு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

அதே தினம் புத்தளம் மாவட்டத்தில் மீன்பிடிக் கிராமமான உடப்புவில் தாயொருவர் தனது ஒன்றரை வயது குழந்தையை இறால் பண்ணை தொட்டிக்குள் வீசினார்.

இந்த பரிதாப சம்பவங்கள் கடந்த 3 மாத காலத்துக்குள் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இடம்பெற்றவை. இவற்றை விட அண்மைய, காலத்தில் பெற்றோர் பிள்ளைகளையும் கொலை செய்து, தாங்களும் உயிரை மாய்த்த பல சம்பவங்கள் இடம்பெற்றதை பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்திருக்கிறோம்.

இத்தகைய சம்பவங்களில் எதுவுமே மதுவுக்கு அல்லது போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அல்லது சித்த சுவாதீனமற்றவர்கள் சம்பந்தப்பட்டது என்று அறியவரவில்லை.

அத்துடன் தங்களதும் பிள்ளைகளதும் உயிரை மாய்த்துக்கொண்ட இவர்கள் சகலரும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

குடும்பத்தகராறு, கடன் பிரச்சினை அல்லது அவை போன்ற விரக்தியான சூழ்நிலைகளே விபரீதமான இந்த கொடிய முடிவுகளுக்கு இவர்களை தள்ளியிருக்கக்கூடிய உடனடிக் காரணிகளாக இருந்தாலும், அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக வறுமையே இருக்கிறது.

இந்நிலையில் தற்போது பொருளாதார நெருக்கடியால் வறுமையானது பல குடும்பங்களிலும் தலைவிரித்தாடுவதால் போசாக்கின்மை பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

போசாக்கின்மையால் பரிதவிக்கும் அல்லது உயிருக்காக போராடுவோரின் தகவல்கள் பொதுவெளியில் தெரியவராத பரிதாபகரமான சம்பவங்கள் எத்தனை இருக்கின்றனவோ, யாரறிவார்!

போசாக்கின்மையால் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான பாதிப்புகளால் எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சியே பெரும் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப் பெண்கள் வறுமை நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை பேசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமெனவும் குழந்தையின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், குழந்தை உணவூட்டப்படாமல் உயிரிழந்ததாக” கூறுகிறார் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்.

மது வயது 27 – கொழும்பு 15, மட்டக்குளி

“பிள்ளைகளுக்கு போதியளவு போசாக்கான உணவுகளை வழங்க வேண்டியுள்ளதாலும் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டியதாலும் வேலையில் இருந்து விலகி கடைகளின் வாசல்களில் நின்று ஏதாவது தாருங்கள் என கையில் 2 வயதுக் குழந்தையுடன் பிச்சை கேட்கின்றார் 27 வயதான மது.

கொழும்பு 15, மட்டக்குளி சமித்புர பகுதியில் வசிக்கும் மதுவின் கணவர் போதைக்கு அடிமையான நிலையில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதையடுத்து 3 பிள்ளைகளுடன் மது இவ்வாறு நடுத்தெருவில் நிற்கின்றார்.

இத்தகையதொரு பின்புலத்திலேயே வறுமை காரணமாக குடும்பங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்களை நோக்கவேண்டும். வறுமை அவர்களின் கண்ணியத்தை சிதைத்துவிடுகிறது. குடும்பத்தை காப்பாற்ற ஒரு குறைந்தபட்ச வருமானத்தையேனும் தேட முடியாமல், பிள்ளைகளின் பட்டினியை போக்க முடியாமல், பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாமல் போனதன் பின்னர் தாங்கள் உயிர்வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று இவ்வாறான குடும்பங்கள் நினைத்துவிட்டன என்று தான் கூறவேண்டும்.

அது மாத்திரமல்ல, தற்போதைய பொருளாதார நெருக்கடி சமூகத்தில் பதற்றநிலையையும் சட்ட ஒழுங்கின்மையையும் தோற்றுவித்திருக்கிறது. வாழ்க்கைச் செலவை பெரும்பாலான மக்களால் நீண்ட நாட்களுக்கு சமாளிக்கமுடியாத நிலையில் அவர்களில் கணிசமான பிரிவினர் முறைகேடான வழிகளில் நாட்டம் காட்டும் போக்கு அதிகரிக்கவே செய்யும் நிலை காணப்படுகின்றது.

“யாழில் போசாக்கு குறைபாட்டால் இறந்த 52 நாள் சிசுவின் வீட்டில் கடும் வறுமை காணப்படுவதால் இது குறித்த சிசுவைத் தாக்கியுள்ளது. இதனால் தாயின் பாலைக் குடித்து வளர்ந்த சிசு உயிரிழந்துள்ளதாக” வடமராட்சி மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா விஞ்சன்தயான் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் வரலாறு காணாத தற்போதைய பொருளாதார நெருக்கடி ஓரளவுக்கு சௌகரியமான வாழ்க்கை வாழ்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களில் பெரும் பகுதியினரையும் கூட இடர்பாடுகளுக்கு உள்ளாக்கியிருக்கும் நிலையில், வசதி குறைந்த மக்கள் குறிப்பாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை எவ்வாறு ஓட்டுகிறார்கள் என்பது உண்மையில் நினைத்துப் பார்க்க முடியாததாகும்.

“எனக்கு 2 பிள்ளைகள் முதலாவது பிள்ளைக்கு வயது 5, அடுத்த குழந்தை பிறந்து 8 மாதங்களாகின்றன. பிள்ளைகளுக்கு உணவுகளை பெற்றுக் கொடுப்பதற்கு பெரும் சிரமமாகவுள்ளது. அதுவும் போசாக்குள்ள உணவுகளை பெறுவதே பெரும் கஷ்டம். கணவனும் கூலி வேலை செய்கிறார். பொருட்களின் விலைகளே உயர்ந்துசெல்கின்றதே தவிர குறைவதாக காணவில்லை. ஆரோக்கியமான குடும்பத்தை எவ்வாறு உருவாக்குவது” என்ற அங்கலாய்ப்பில் உள்ளார் கல்முனையைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த இளம் தாயான பாத்திமா உமைறா.

நாட்டின் மாவட்ட மட்டத்தில் வறுமைநிலை என்பது கொழும்பில் குறைந்தளவான 3.5 சதவீதத்திலும் நுவரெலியாவில் 44.2 சதவீதமாக அதிகரித்த அளவிலும் காணப்படுவதாக தேசிய மற்றும் சிறுவர் ஆய்வுகள் கூறுகின்றன.

வழமையாக உண்ணுகின்ற உணவுப்பொருட்களில் பலவற்றை வாங்குவதை தவிர்ப்பதற்கு பல குடும்பங்கள் தங்களை பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டன. சாப்பாடு என்பது இவர்களை பொறுத்தவரையில் சமாளிக்கும் ஒன்றாக மாறிவிட்டது. உணவுப்பொருட்களின் விலைகள் கட்டுப்படியாகாது என்பதால் மூன்று வேளை உணவை உட்கொள்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்திருக்கிறது.

வடமாகாண சமுதாய மருத்துவ நிபுணர் சுப்பிரமணியம் சிவகணேஷ்

“குறிப்பாக ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துதல், குடும்பத் தலைவர்களாக இருந்தால் மதுபானம், போதைப்பொட்களுக்கு செலவு செய்யும் பணத்தை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத் தலைவிகளாக இருந்தால் அழகு படுத்தப் பயன்படுத்தும் பொருட்களுக்கு செலவு செய்யும் பணத்தை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு கட்டுப்படுத்தும் போது கிடைக்கும் பணத்தை அவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் பெரும்பாலும் ஊர் பகுதிகளில் மலிவான விலையில் போசக்கு நிறைந்த உணவுகளை கொள்வனவு செய்ய முடியும்” என்கிறார் வடமாகாண சமுதாய மருத்துவ நிபுணர் சுப்பிரமணியம் சிவகணேஷ்.

அடுத்த வேளை உணவு எங்கிருந்து வருமோ என்ற ஏக்கத்துடன் பெருவாரியான குடும்பங்களின் சிறுவர்கள் படுக்கைக்கு போகிறார்கள்.

ரோஹினி வயது – 34 வவுனியா மரக்காரம்பளை

“போசாக்குள்ள உணவுகளை பிள்ளைகளுக்கு கொடுப்பதென்பதே ஒரு பெரிய பிரச்சினையாகவுள்ளது எங்களது வீட்டில் இந்தப் பிரச்சினை காணப்படுகின்றது. சிறு பிள்ளைகளுக்கு போசாக்கான உணவுகளை எம்மால் வழங்க முடியாதுள்ளது. ஏனென்றால் பிள்ளைகளுக்கு சத்தான மாவொன்றை வாங்கிக் கொடுப்பதென்றாலோ அல்லது பயறு, உழுந்து, முட்டை, பால் மற்றும் ஏனையவற்றை வாங்கிக்கொடுப்பதென்றால் எமக்கு முடியாத காரியமாக உள்ளது” என்கிறார் வவுனியா மரக்காரம்பளையைச் சேர்ந்த 34 வயதுடைய ரோஹினி.

23 இலட்சம் சிறுவர்கள் உட்பட 57 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக 2022ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் யுனிசெப் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் விளைவாக மந்தபோசாக்கினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் உயர்ந்த எண்ணிக்கையைக் கொண்ட உலகின் பத்து நாடுகளில் இலங்கையும் ஒன்றாக காணப்படுகிறது.

பிள்ளைகளுக்கு மூன்று வேளை ஒழுங்காக உணவை கொடுத்து தேவையான கல்வி உபகரணங்களுடன் அவர்களை பாடசாலைக்கு அனுப்பக்கூடிய நிலையில் பெரும்பாலான குடும்பங்கள் இல்லை. பிள்ளைகள் கல்வியை இடைநடுவில் கைவிடுவது என்பது பாரியதொரு பிரச்சினையாக உருவாகி வருகிறது.

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பெற்றோரின் ஊதியம் போதாமல் இருப்பதால் குடும்பச் செலவை சமாளிக்க பல மாணவர்கள் கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களை தேடிச் செலவதாக அண்மைய பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

‘கணவன் மதுப் பழக்கத்திற்கு அடிமையான நிலையில் காலமானார். எனக்கு 3 பிள்ளைகள். ஒரு நாளைக்கு 1000 ரூபாவை பெறுவது சிரமமானது. எனக்கு மாதம் 15 அல்லது 16 ஆயிரம் ரூபா மட்டுமே வருமானமாக கிடைக்கின்றது. பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். உணவிற்கான பிரச்சினை உள்ளது. தற்போதைய வாழ்க்கை செலவு மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. நாளாந்தாம் 1000 ரூபாவை பெற்றுக்கொள்வது மிகச் சிரமமானது.தோட்ட தொழிலில் கிடைக்கும் வருமானம் போதுமானதல்ல” என்கிறார் வறுமைக்கு எதிராக போராடும் தேயிலைத் தோட்டத் தொழிலாளியான 31 வயதுடைய காமாட்சி.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக உணவு, கல்வி மற்றும் சுகாதாரசேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் தொடர்ந்து சிக்கல்களுக்கு முகங்கொடுத்துவருவதாக சுட்டிக்காட்டியுள்ள மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம், இலங்கையில் சுமார் 7 மில்லியன் மக்கள் அத்தியாவசிய உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

“ பிள்ளைகளுக்கு உணவுகளை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் உள்ளேன். அவர்களுக்கு நிறைவான உணவு இல்லாமையால் பிள்ளைகள் சோர்ந்து போகின்றனர். பிள்ளைகளுக்கு போசாக்கான உணவுகளை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளதால் இவ்வாறு பிச்சையெடுப்பதாக” மது மிகவும் கவலையுடன் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் இன்னமும் ஓரளவு அல்லது மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். பொருளாதாரநெருக்கடியின் தாக்கம் தொடர்ந்தும் உயர்வாக காணப்படுகின்றது. இந்த நெருக்கடி தற்போதைக்கு முடிவிற்கு வரப்போவதில்லை என்பதை செஞ்சிலுவை செம்பிறைச்சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் தெரிவித்துள்ளது.

செவ்வந்தி வயது 27 – கொழும்பு கொம்பனித்தொரு

“எனது காணவர் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் படுக்கையில் உள்ளார். 2 ஆவது மகனுக்கு நான் பாலூட்டுகின்றேன். ஆடைத் தொழிற்சாலையில் எனக்கு கிடைக்கும் சம்பளம் குடும்பதைக் கொண்டு நடத்த முடியாததால் பிச்சையெடுக்கின்றேன். பிள்ளைகளுக்கு சத்தான உணவுகளை வாங்கிக்கொடுக்க முடியாது. பால் மாக்களை வாங்குவதென்றால் எமக்கு முடியாத காரியம்” என்கிறார் கொழும்பு கொம்பனித்தொருவைச் சேர்ந்த 27 வயதான செவ்வந்தி என்ற பெரும்பான்மையின தாய்.

கிடைக்கும் பணத்தை எவ்வாறு ஆரோக்கியமான போசாக்குக் கூடிய உணவுகளுக்கு செலவழிப்பது தொடர்பில் மக்களுக்கு சரியான தெளிவு இருக்க வேண்டும். அத்துடன் கிடைக்கும் பணத்தை வேறு தேவைகளுக்கு அதாவது ஆடம்பர செலவுகளுக்கு செலவழிக்காது அவற்றை முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்கிறார் வடமாகாண சமுதாய மருத்துவ நிபுணர் சுப்பிரமணியம் சிவகணேஷ்,

இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் 12.2 சதவீதமாகக் காணப்பட்ட எடைகுறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு 15.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று தமது பிள்ளைகளுக்கு அவசியமான உணவை வழங்குவதில் பெருமளவான குடும்பங்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்ததுடன் பொதுப்போக்குவரத்து சேவை குறைபாட்டின் விளைவாக சிறுவர்களால் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாத நிலையேற்பட்டது. இவ்வாறான நடவடிக்கைகள் ‘சிறுவர் தொழிலாளர்’ எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வழிகோலியதுடன், அவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்தியது என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

செல்வராசா பிறேமானந்தி – 39 வயது மட்டக்களப்பு – ஐங்கேணி

நான் கர்ப்பிணியாக இருந்த காலத்தில் தேவையானளவு போசாக்கான உணவு உண்ணவில்லை. அதனால் எனக்கு பிறந்த குழந்தை எடைகுறைவாக பிறந்துள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படும் உணவகளை வாங்கி உண்பதற்கும் எமக்கு வசதியில்லை என மட்டக்களப்பு ஐங்கேணி பழைய மயான வீதியைச் சேர்ந்த 39 வயதுடைய செல்வராசா பிறேமானந்தி கூறுகிறார்.

செல்வராசா பிறேமானந்தி வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தில் பிறந்தவர் குடும்ப வறுமை மத்திய கிழக்கு நாட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று தனக்கென ஒரு வீட்டை கட்டி வாழ்கிறார். இவரது கணவர் கூலித் தொழில் புரிகிறார். தாய் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏற்பட்ட தொழில்வாய்ப்பு இழப்பு, உயர் உணவுப்பணவீக்கம், வரையறுக்கப்பட்டளவிலான உரம் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பவற்றின் விளைவாக வறுமை உயர்வடைந்திருப்பதுடன், அது எதிர்வரும் வருடங்களிலும் 25 சதவீதத்துக்குமேல் காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகுராம் சத்தியகலா – 35 வயது மட்டக்களப்பு செங்கலடி

எனது கணவனின் வருமானத்தில் கிடைக்கும் உணவுகளையே நாங்கள் சாப்பிட்டு வந்தோம் எனது குழந்தைக்கு இரண்டு வயது ஆனால் 8 கிலோ 500கிராம் எடையிலே உள்ளது ஆனால் 10 கிலோ 500 கிராம் எடை இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள் எங்கள் வருமானத்தில் அவர்கள் கூறும் உணவுகளை வாங்க முடியாது என மட்டக்களப்பு செங்கலடி பாரதிபுரம் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய ராகுராம் சத்தியகலா கூறுகிறார்.

எனது கணவர் கூலித்தொழில் செய்பவர். கொரோனாவக்கு முன்பு அவர் உழைக்கும் பணம் குடும்ப செலவுகளுக்குப் போதுமானதாக இருந்தது ஆனால் தற்போது பெருட்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது கிடைக்கும் வருமானத்தில் அதிகரிப்பு இல்லை பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்வதற்க எங்களுக்கு வருமானம் போதுமானதாக இல்லை. இந்த நிலையில் மூன்று நேரம் உணவுக்காக கையேந்தும் நிலையில் உள்ளோம் இதில் போசாக்கான உணவிற்கு நாங்கள் எங்கே செல்வது என தனது மனக்குமிறலை வெளியிட்டார் ராகுராம் சத்தியகலா.

எமது ஆய்வுகளின்படி போசாக்கு குறைபாட்டுக்கு பொருளாதார காரணங்கள் இருந்தாலும், பிரதான காரணமாக இருப்பது கல்வியறிவுள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு போசாக்குதொடர்பான அறிவு குறைவாகவே காணப்படுகின்றது. இருந்தும் இவ்வாறானவர்களுக்கு போசாக்கு தொடர்பான அறிவூட்டல்கள் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் 3 மொழிகளிலும் கிடைக்கக்கூடியதாக உள்ளது என்கிறார் வடமாகாண சமுதாய மருத்துவ நிபுணர் சுப்பிரமணியம் சிவகணேஷ்.

2020 ஆண்டுக்குப்பின்பு நாட்டின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட போசாக்கு குறைபாட்டின் தாக்கங்கள் 2037 முதல் வெளிவரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் செல்வாக்குச் செலுத்தும் என மட்டக்களப்ப மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியொருவர் கூறினார்.

கொரோனா தாக்கத்தின் பின் நாட்டின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பொருட்களின் விலைவுயர்வு போன்ற காரணங்களினால் விளிம்புநிலையிலுள்ள மக்கள் பெரும் சாவால்களை எதிர் கொண்டுள்ளனர். தாய் சேய் நலனுக்குத் தேவையான போசாக்கான உணவுகள் உண்ணாததன் காரணமாக 2021 ஆண்டுக்குப் பின்பு பிறந்த பல குழந்தைகள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் எதிர்காலத்தில் விளையாட்டுத்துறை மற்றும் கல்வித்துறையில் பல சவால்களை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.

வேள்வி பெண்கள் அமைப்பின் உப தலைவி றிலீபா மொஹிடீன்

“போசாக்கின்மையால் ஏற்படும் பாதிப்பின் பின்விளைவுகளால் பிறக்கும் பிள்ளைகளும் வளரும் பிள்ளைகளும் சமூகத்திற்கு பெரும் சுமைகளாக மாறும் நிலை ஏற்படும். போசாக்கின்மை என்பது எதிர்கால சமூகத்தை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும். பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் சத்துமாக்களை உணவாக எடுத்துக்கொள்ளலாம். அரசாங்கம் மருந்துப்பொருட்கள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களுக்கான பொருட்களின் வரிகள் குறைக்கப்படவேண்டும். விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேணடும். இவ்வாறு ஏதாவது முன்னெடுத்தால் தான் எதிர்கால சந்ததியை பாதுகாக்க முடியும்.” என கல்முனையில் இயங்கும் வேள்வி பெண்கள் அமைப்பின் உப தலைவி றிலீபா மொஹிடீன் கூறுகிறார்.

தேசிய பல்பரிமாண வறுமைச் சுட்டெண் மூலம் ஏழைகளாகக் கருதப்படும் அனைத்து சிறுவர்களும் தனிப்பட்ட நிலையில் சமகாலத்தில் ஏழைகளாக உள்ளனர். ஒவ்வொரு குழந்தையின் ஊட்டச்சத்து மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் உள்ள குறைபாடுகளை உள்ளடக்கியதாகவுள்ளது. 0 முதல் 4 வயதுடைய சிறுவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (33.4 சதவீதம்) பல்பரிமாண ஏழ்மைநிலையிலும் எடை குறைவாகவோ அல்லது வளர்ச்சி குன்றியவர்கவோ உள்ளனர். 0 முதல் 4 வயதுடைய சிறுவர்களில் ஆறில் ஒரு பங்கினர் (16.4 சதவீதம்) பல்பரிமாண ஏழைகளாகவும் குழந்தைப் பருவ வளர்ச்சியில் பின்தங்கியவர்களாகவும் உள்ளனர். 0 முதல் 11 மாதங்கள் மற்றும் 4 வயதுடைய சிறுவர்களில் அரைவாசிப் பேர் ஏழைகளாக உள்ளனர். குறிப்பாக 0 முதல் 11 மாதங்கள் வயதுடையவர்கள் போஷாக்கு குறைபாட்டையும் 4 வயதுடையவர்கள் முன்பள்ளிகளில் அனுமதிக்கப்படாமலும் உள்ளனர். 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களில், ஒவ்வொரு 10 சிறுவர்களில் நான்கிற்கும் (42.2 சதவீதம்) அதிகமானோர் பல்பரிமாணங்களில் ஏழைகளாக உள்ளதாக தேசிய மற்றும் சிறுவர் ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இவையெல்லாம் பொருளாதார நெருக்கடியில் தணிவு ஏற்படாத பட்சத்தில் நாட்டில் அராஜக நிலை தோன்றக்கூடிய பேராபத்து ஏற்படும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றன.

குடும்பங்கள் கூட்டாக தற்கொலை செய்வது உட்பட இந்த கொடூர சம்பவங்கள் குறித்து நாட்டின் இன்றைய வங்குரோத்து நிலைக்கு பொறுப்பானவர்கள் எதையுமே பேசாமல் இருப்பது பெரும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது. ஆனாலும் மக்கள் தற்போதைய நிலையை உணர்ந்து செயற்பட வேண்டியுள்ளது. பெற்றோர்கள் பொறுப்புடன் தங்கள் பிள்ளைகளுக்கு போசக்குள்ள உணவுகளை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

Recommended For You

About the Author: S.R.KARAN