வவுனியாவில் குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி தொடர்ந்தும் விடுமுறை நாட்களிலும், இரவு வேளைகளிலும் வேலி அடைக்கப்பட்டு வரும் நிலையில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான பட்டாணிச்சூர் புளியங்குளத்தின் குருமன்காட்டுக்கு அண்மித்த மன்னார் வீதி ஓரமாகவுள்ள நீரேந்து பிரதேசத்தை ஆக்கிரமித்து குறித்த சில நபர்களால் கம்பி கட்டை போடப்பட்டு கடந்த 30 ஆம் திகதி வேலி அடைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கவனத்திற்கு சென்றதையடுத்து குறித்த வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
வெசாக் தினத்தை முன்னிட்டு அரச திணைக்களங்களுக்கு விடுமுறை விட்டுள்ள நிலையில் நேற்று (06.05) மாலை முதல் இரவிரவாக குறித்த பகுதியில் மேலும் குளத்து நீரேந்து பிரதேச நிலத்தை கையகப்படுத்தி வேலி அடைக்கப்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கவனத்திற்கு விவசாய அமைப்புக்கள் கொண்டு சென்றதையடுத்து, அரச நிலத்தை அத்து மீறி கையகப்படுத்தி வேலி அடைத்தமைக்கு எதிராக கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த சமட்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நீரேந்து பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினை அண்மித்தே குறித்த வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே குறித்த பகுதிக்கு அண்மையாக ஒரு பெண் தனது வீட்டினை அண்மித்த காணித்துண்டம் ஒன்றினை வேலியிட்டு அடைத்த போது கமநல அபிவிருத்தி திணைக்களத்தினர்
ஜேசிபி இயந்திரத்துடன் சென்று குறித்த வேலிகளை அகற்றியதுடன், அப் பெண்ணுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.