கல்குடா வலயத்தின் பாடசாலையான பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் கடந்த காலங்களில் கடமையாற்றி ஓய்வு பெற்ற மற்றும், இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு கடந்த சனிக்கிழமை (29) குறித்த பாடசாலையில் இடம்பெற்றது.
2000 ஆம் வருட க.பொ.த சாதாரண தர மாணவர்களால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட இந் நிகழ்வில் அவர்களுக்கு தரம் 1 தொடக்கம் இறுதி வரை கற்பித்த 20 ஆசிரியர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, பேண்ட் வாத்திய இசையுடன் வரவழைக்கப்பட்டனர்.
அத்துடன் அவர்களுக்கு கற்பித்த உயிர் நீர்த்த அதிபர்கள், ஆசிரியர்களுக்கும், சக மாணவர்களுக்குமான அஞ்சலி நிகழ்வுடன் இந் நிகழ்வு ஆரம்பமானது.
இந் நிகழ்வில் துரதிஸ்ட வசமாக கலந்து கொள்ள முடியாத ஏனைய ஆசிரியர்களும், தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் வசிக்கும் பழைய மாணவர்களும் இணையமூடாக இணைந்து தமது கருத்துக்களை பரிமாறியிருந்தனர்.
அத்துடன் இப் பழைய மாணவர்களால் தற்போது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒரு தொகுதியினருக்கான காலணிகள், புத்தகப் பைகள், கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் நிகழ்விற்கு அழைக்கபட்ட ஆசிரியர்களின் கரங்களினூடாக வழங்கப்பட்டிருந்தது.
அத்தோடு குறித்த பழைய மாணவர்கள் அவர்கள் கற்ற காலங்களின் ஆசிரியர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அமையாத பெரும் குறையினை இந்நிகழ்வின் போது குழுப் புகைப்பட பிரதிகளை ஆசிரியர்களுக்கும் வழங்கி, ஆசிரியர்களின் கரங்களினால் அவர்களும் பெற்று நிவர்த்தி செய்து கொண்டதுடன் ஆசிகளையும் பெற்றுக் கொண்டமை ஓர் நெகிழ்ச்சியான விடையமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.