இத்தொழிலாளர் தினம் தன் உரிமைக்காகப் போராடும் தமிழருக்கு சிறந்ததொரு பாடமாக இருக்கும்…
(ஜனநாயகப் போராளிகள் கட்சி)
உழைக்கும் வர்க்கம் தன் உரிமையைப் போராடிப் பெற்றுக் கொண்ட நாள். இத்தொழிலாளர் தினம் தன் உரிமைக்காகப் போராடும் தமிழருக்கு சிறந்ததொரு பாடமாக இருக்கும். போராடிப் பெற்ற உழைப்பாளர் தினத்தில் கூட தங்கள் வாழ்க்கைச் சுமையை எண்ணிப் போராட்டம் நடத்தும் நிலையிலேயே எமது நாட்டில் உழைப்பாளர்களின் நிலைமை காணப்படுகின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.
இன்றைய உழைப்பாளர் தினத்தில் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் முகமாக ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் விடுக்கப்பட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இன்று சர்வதேச தொழிலாளர் தினம். இது தொழிலாளர்களைக் கௌரவப்படுத்தும் தினமாகும். உழைக்கும் வர்க்கம் தன் உரிமையைப் போராடிப் பெற்றுக் கொண்ட நாள். இந்நாள் ஒரு வரலாற்றுப் பாடம். ஒடுக்கப்பட்ட வர்க்கம் போர்க்கொடியேற்றினால் எத்தகு விளைவுகள் ஏற்படும் என்பதை வல்லாதிக்க நாடுகளுக்குப் பறைசாற்றிய இந்நாள் ஈழத் தமிழர்களுக்கு கற்றுத் தரும் பாடங்கள் ஏராளம்.
இன்று இந்த நாட்டில் உழைக்கும் வர்க்கம் மிகவும் அல்லலுற்றுக் கொண்டிருக்கின்றது. போராடிப் பெற்ற உழைப்பாளர் தினத்தில் கூட தங்கள் வாழ்க்கைச் சுமையை எண்ணிப் போராட்டம் நடத்தும் நிலையிலேயே எமது நாட்டில் உழைப்பாளர்களின் நிலைமை காணப்படுகின்றது.
நாட்டை ஆட்சி செய்ய வந்தவர்கள் நாட்டைச் சூறையாடியமையால் ஒட்டுமொத்த மக்களும் இன்று அல்லலுற்றிருக்கின்றனர். ஊழல்வாதிகளிpன் முகத்திரையைக் கிழிக்கவென்று வந்தவர்களும் கூட மக்கள் மீதே வரிச்சுமைகளை ஏற்றியிருக்கின்றனர். இதனால் அடிமட்டம் முதல் தொழிலாளர் என அனைவரும் பாதிப்புறுகின்றனர். விவசாயம், மீன்பிடி, கூலித்தொழிலாளி, சுயதொழிலாளி, அரச உத்தியோகத்தர்கள் உட்பட சகல வர்க்கத்தினரையும் இந்த நாட்டை ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் வதைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இத்தொழிலாளர் தினம் இன்னும் இன்னும் தன் உரிமைக்காகப் போராடும் தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். போராடிப் பெற முடியாதது எதுவுமே இல்லை என்பதையே இன்றைய நாள் எமக்கு உணர்த்துகின்றது. போராட்டங்கள் என்பது வெறுமனே எதிர்ப்பை வெளிப்படுத்துவது மாத்திரமல்ல போராடும் வர்க்கத்தின் ஒற்றுமை, பலம் என்பவற்றை அனைவருக்கும் வெளிப்படுத்துவது. இதன் மூலம் அனைவரையும் எமது பக்கம் திரும்பிப் பார்க்க வைக்க முடியும்.
தொழிலாளர்களின் பேராட்டம் வல்லரசுகளையே உலுக்கியிருக்கின்றதென்றால் அது அவர்களின் ஒற்றுமையான பயணத்திற்குக் கிடைத்த வெற்றி. அந்த ஒற்றுமை இன்று எமது மக்கள் மத்தியில் இல்லை. அதனை நாங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதன் எமது போராட்டங்களுக்கான உண்மையான வெற்றி கிட்டும்.
இன்றைய இந்த உழைப்பாளர் தினத்தில் உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து தங்கள் வாழ்க்கையைப் போராடிக் கழித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உழைப்பாளிகளான போராளிகளுக்கும் எங்கள் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்ப்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, உழைப்பாளிகளின் வாழ்வில் விடியல் தோன்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.