கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள செய்தி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா ஆதரவளிக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தமது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்தகால கூட்டத்தொடரில்; பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள அவர், அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடன்களை மறுசீரமைக்கும் நாட்டின் முயற்சிக்கு, சீனா ஆதரவளிக்கும் என்றும், மீளச்செலுத்தும் கடப்பாடுகளுக்கு உதவும் என்று எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சீனா, இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு உதவவேண்டும் என்று அமெரிக்க திறைசேரி செயலாளரும் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில், மத்திய வங்கி ஆளநரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

இதேவேளை, இலங்கை மீதான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை செயல்முறையை ஆரம்பிப்பது குறித்து, ஜப்பான் மற்றும் இந்திய நிதி அமைச்சர்கள் அறிவிக்க உள்ளனர்.

வொஷிங்டனில் நாளைய தினம் நடைபெறும் வசந்தகால கூட்டத்துக்கு அப்பால் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரான்ஸின் திறைசேரி பணிப்பாளர் இம்மானுவேல் மௌலின் ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பதை உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இணையவுள்ளதாக ஜப்பானிய நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணையத்தின் ஊடாக இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor