“மலையகம் 200 என்பது வெறும் ஒரு நிகழ்வு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்..” என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மலையகம் 200 தொடர்பாக தெரிவித்தார்.
மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகின்றது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாது கடல் கடந்தும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இவை அனைத்தும் வரவேற்கத்தக்கவைகள். எனினும் மலையகம் 200 என்பது வெறும் நிகழ்வல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இருநூறு ஆண்டுகள் ஆகின்றது. இருநூறு ஆண்டுகள் கடந்து இன்று எமது மக்களின் நிலை என்ன என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. அதே வேளை எங்களைப்போன்றே இந்தியாவில் இருந்து வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் இன்றைய நிலைமை என்ன என்பதையும் நாம் ஆராய வேண்டியுள்ளது. அவ்வாறு ஏனைய நாடுகளுக்கு சென்றவர்கள் இன்று அந்நாடுகளில் உள்ள ஏனைய சமூகங்களுக்கு சமனானவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது சமூக, பொருளாதார நிலைமைகள் உயர்வான மட்டத்தில் உள்ளது. எனினும் நாம் எங்கே இருக்கின்றோம் என்பது முக்கியமானதாகும்.
இன்றும் எமது மக்கள் தோட்ட நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர். தொழில் நிலையில், தொழில் முறையில் எவ்வித மாற்றமும் இல்லை. குடியிருப்புகள் இன்றும் அன்று உருவாக்கப்பட்ட லயன் அறைகளே. கல்வி, சுகாதாரம், அரச நிர்வாகம் என எல்லாவற்றிலும் பாராபட்சமான நிலையே தொடர்கின்றது.
இன்று நாட்டிலே எடுக்கப்படுகின்ற எல்லா புள்ளி விபரங்களிலும் எமது சமூகமே கீழ் நிலையில் இருக்கின்றது. இருநூறு ஆண்டுகள் கடந்து, இன்றும் கூட இந்நிலைமையில் இருந்து மீள்வதற்கான கொள்கை திட்டம் ஒன்று இல்லை. வேலைத்திட்டம் ஒன்றும் இல்லை. இவ்வாறான சூழ்நிலையில் அரசியல் தலைமைகள் மலையகம் 200 ஐ முற்போக்காக பார்க்க வேண்டும். அதனை விடுத்து அதனை ஒருநாள் நிகழ்வாக காட்டி, மக்களை திரட்டி, நிகழ்வு நடத்துவது, இன்னும் நாம் பிற்போக்கு சிந்தனையில் இருந்து மீளவில்லை என்பதையே காட்டுகின்றது.
மலையகம் 200 இனை மையப்படுத்தியாவது மலையக மக்களின் விடுதலைக்கான கொள்கை திட்டமொன்றை உருவாக்க முன்வாருங்கள். அதன் அடிப்படையில் மலையக மக்களின் வாழ்க்கை நிலையை மேன்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்வையுங்கள். அதுவே மலையகம் 200 இல் ஆக்கபூர்வமான முன்னெடுப்பாக அமையும். அவ்வாறில்லாது நாம் இதே போல பயணிப்போமாயின் மலையக சமூகத்தின் எதிர்காலம் என்பது இன்று போல நாளையும் கேள்விக்குறியாகவே அமையும்.