மாணவர்களுடன் கவிழ்ந்த கெப் வாகனம் குறித்து வௌியான தகவல்!

பதுளை தர்மதூத கல்லூரிக்கும் ஊவா கல்லூரிக்கும் இடையிலான பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியின் போது கெப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

பதுளை தர்மதூத உயர்தரப் பாடசாலையின் 13ஆம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பதுளை தர்மதூத கல்லூரிக்கும் பதுளை ஊவா கல்லூரிக்கும் இடையிலான வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (01) இரண்டாவது நாளாக பதுளை வின்சென்ட் டயஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

இதற்கு இணைந்ததாக பதுளை நகரில் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றிய வாகன பேரணியும் இடம்பெற்றது.

எவ்வாறாயினும், பிரதான வீதியில் வாகன பேரணிக்கு பொலிஸார் தடை விதித்திருந்தனர்.

அதன் காரணமாக குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக பதுளையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இடத்தில் குறித்த வாகன பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போது, ​​ஏறக்குறைய 15 மாணவர்களை ஏற்றிச் சென்ற கெப் ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தை அங்கிருந்த நபர் ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்திருந்தார்.

விபத்தில் காயமடைந்த 08 மாணவர்களை பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் 13ம் வகுப்பு மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதுளை தர்மதூத வித்தியாலயத்தில் 13ஆம் தரத்தில் கல்வி கற்ற ஆர். எம். ரவிந்து மற்றும் ஹரேந்திர ருக்மால் ஆகிய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் ஹாலிஎல மற்றும் ரம்புக்கன பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

விபத்தின் போது வாகனத்தை மாணவர் ஒருவரே செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அவரும் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்விபத்து காரணமாக இரு பாடசாலைகளுக்கிடையில் வருடாந்தம் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியை இடைநிறுத்துவதற்கு பாடசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

Recommended For You

About the Author: admin