வெடுக்குநாறிமலை ஆலய விவகார வழக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி

வவுனியா ஒலுமடு வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விக்கிரங்கள் உடைத்து அழிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை, எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு, வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் திகதியிடப்பட்டுள்ளது.

ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த, நெடுங்கேணி பொலிசார், ஆலய நிர்வாகத்தினரின் தொலைபேசி அழைப்புக்களை பெற, கடந்த செவ்வாய்கிழமை, வவுனியா நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரினர்.

இதன் போது, மன்றில் இருந்த சட்டத்தரணிகள், பொலிசாரின் கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், குறித்த விக்கிரகங்களை உடைத்தமை தொடர்பில், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கு மன்று உத்தரவு இட வேண்டும் எனவும் கோரினர்.

சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஏற்ற, வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி சுபாசினி தேவராசா, உடனடியாக விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு, மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், குற்றவாளிகளை கைது செய்யுமாறும் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், நேற்று முன்தினம் மன்றில் தோன்றிய பொலிசார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், குறித்த வெடுக்குநாறிப் பகுதி தொலைபேசி அலைவரிசை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், மன்றின் அனுமதி கோரினர்.

அதனையடுத்து, வழக்கு விசாரணை, எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு, வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் திகதியிடப்பட்டது.

Recommended For You

About the Author: admin