யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மேற்கு பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்

வட்டு மேற்கு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றின் தொலைத்தொடர்பு கோபுரத்தினை அமைப்பதற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வலி. மேற்கு பிரதேச சபையின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த கடிதத்தின் பிரதியை விமானப்படை, பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அதிகாரசபை, UDA, MOH, வடக்கு மாகாண ஆளுநர், உள்ளூராட்சி மன்ற உதவி ஆணைய ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் உள்ளதாவது,

வட்டு மேற்கு பகுதியில் வசிக்கும் மக்களாகிய நாங்கள் அறியத் தருவது யாதெனில், வட்டு மேற்கு, வட்டுக்கோட்டை கிராமத்தில், மூளாய் 4ஆம் ஒழுங்கையில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு டயலாக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதேச சபையிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, பிரதேச சபையினால் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. டயலாக் நிறுவனத்தால் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இக் கிராம பொது அமைப்புகளிடமும் அனுமதி/ சம்மதக் கடிதம் பெறப்பட்டதாக பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இக் கோபுரம் அமைக்கும் இடத்திற்கும், சம்மதக் கடிதம் வழங்கிய அமைப்புக்களுக்குமிடையில் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அத்துடன் தொலைத் தொடர்பு கோபுரத்தினை அமைப்பதற்கு காணியை வழங்கிய நபர் இப் பிரதேசத்தில் இல்லை, அத்துடன் இக் காணியின் உரிமையாளர் தன்னுடைய காணியில் இரண்டாவது கோபுரம் அமைப்பதற்கு வழங்கியுள்ளார்.

இரண்டு பிரதேசங்களில் அமைப்பதற்கு காணியை வழங்கியுள்ளார். அத்துடன் கோபுரம் அமைப்பது அயல் வீட்டாருக்கு கூட தெரியாத வகையில் பணிகள் முடக்கி விடப்பட்டிருந்தது.

இத் தொலைத்தொடர்பு கோபுரம் இப் பிரதேச குடியிருப்பு பகுதியினுள் அமையவிருப்பதால் மக்கள் உடலியல் ரீதியான பாதிப்புகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படலாம். எனவே இந்த கோபுரத்தினை அமைப்பதற்கு இப்பிரதேச மக்கள் எதிர்ப்பினை வெளியிடுவதுடன், இதனை அமைப்பதை உடனடியாக இடைநிறுத்துமாறு வேண்டுகின்றோம் ‘ என்றுள்ளது.

Recommended For You

About the Author: webeditor