சுற்றுலா விசா மூலம் வேலை வாய்ப்பை தேடிச் செல்லும் இலங்கையர்கள்!

பல இலங்கையர்கள் சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயல் படை கண்டறிந்துள்ளது.

இதன் காரணமாக, சுற்றுலா விசாக்கள் எனப்படும் பார்வையாளர் விசாக்களில் செல்லும் இலங்கையர்களை மலேசிய குடிவரவுத்துறை அதிகாரிகள ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரந்தோறும் 20 இலங்கையர்களுக்கு மலேசிய அதிகாரிகள் அனுமதி மறுப்பதுடன் அவர்களை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இலங்கைக்கு நாடுகடத்துவதாகவும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

அதேவேளை இந்த கட்டுப்பாடுகளையும் மீறி சுற்றுலா விசாக்கள் மூலம் மலேசியாவுக்குள் நுழைந்த பல இலங்கையர்கள், தரகர்களின் பேச்சை நம்பி மோசமான நிலையில் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அவர்கள் மோசமான சூழ்நிலைகளின் கீழ் வலுக்கட்டாயமாக எவ்வித தொழிலாளர் உரிமைகளுமின்றி வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அத்துடன் இவ்வாறு செல்லும் இலங்கையர்கள் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களாகி உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், பலர் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்று வருகின்றனர்.

அந்தவகையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் இலங்கையர்கள் படகு வழியாக தஞ்சமடையும் சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் தற்போது இலங்கையர்கள் மலேசியாவுக்கு செல்லும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor