பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தி தமக்கு விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்திற்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (18) முற்பகல் நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய ரொட்டரி கழகத்தின் , மாவட்ட இலக்கம் 3220 ஏற்பாடு செய்த 32 ஆவது ரொட்டரி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் விரைவில் வழமைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, இந்த வருட இறுதிக்குள் நாட்டில் ஜனநாயகம் தளராமல் செயற்படும் சமூகம் கட்டியெழுப்பப்படும் என்றும் உறுதியளித்தார்.
அத்துடன், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து விட்டு மக்கள் துன்பப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான சகல தீர்மானங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
தான் ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்றும், ஆனால் ஜனநாயகத்திற்கு முதலில் பொது அமைதி தேவை என்றும், அதற்கு சட்டம் ஒழுங்கை பேணுவது அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியாது எனவும், ஜனநாயகத்திற்கு நிலையான பொருளாதாரம் அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சட்டம், ஒழுங்கு மற்றும் பொருளாதார மீட்சி இல்லாத நாட்டில் அராஜகமே தவிர ஜனநாயகம் இல்லை எனவும், நாட்டை அராஜக பாதைக்கு செல்ல ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க,அராஜகத்தின் கீழ் நிலைக்கு கொண்டு செல்வதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி தமக்கு விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார். போலியோ தடுப்புப் பிரச்சாரம், சுனாமி மற்றும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி போன்றவற்றுக்கு காலத்தில் முகங்கொடுக்க நேரிட்டது.
இந்த நெருக்கடிகளின் போது ரொட்டரி கழகம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை ஜனாதிபதி பாராட்டினார். மாநாட்டின் தலைவரும் ரொட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான அனீஷா தர்மதாச, இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய 3220 மாவட்டத்தின் ஆளுநர் புபுது செய்சா,மாவட்ட ஆலோசகரும் முன்னாள் தலைவருமான பிரதீப் அமிர்தநாயகம் ஆகியோர் இங்கு உரையாற்றினர்.
இந்நிகழ்வில் சர்வதேச ரொட்டரி தலைவர் திருமதி ஜெனிபர் ஜோன்ஸ் அவர்களின் பிரதிநிதியான திருமதி வலேரி வேஃபர், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.