அண்ணா சாலை கட்டட விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும்- மேயர் பிரியா

சென்னை அண்ணா சாலையில் கட்டட இடிப்பின்போது பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டடத்தை இடித்துக்கொண்டிருந்தபோது சுற்றுச்சுவர் சரிந்து நடைமேடை மீது விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி பத்மபிரியா என்ற ஐ.டி.ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜேசிபி உரிமையாளர் ஞானசேகர், ஜேசிபி ஓட்டுனர் பாலாஜி ஆகியோரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கட்டட உரிமையாளர் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் இளம்பெண்ணின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து பத்மபிரியாவின் உறவினர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட உறவினர்கள், பிரேத பரிசோதனைக்கு பிறகு பத்மபிரியாவின் உடலை பெற்றுக்கொண்டனர்.

இந்தநிலையில் சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மேயர் ப்ரியாவிடம், இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கட்டடத்தை இடிக்க மாநகராட்சியில் முறையான அனுமதி வாங்கியுள்ளதாகவும், ஆனால் கட்டட இடிப்பின்போது தடுப்புகள் அமைக்க வேண்டும், வலைகள் போட வேண்டும் போன்ற மாநகராட்சி விதித்துள்ள நடைமுறைகள் எதையும் பின்பற்றவில்லை என்றும் கூறினார்.

இந்த விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற விபத்துகள் இனி நடைபெறாத வண்ணம் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.

Recommended For You

About the Author: admin