ஆப்கானிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உடலையே உறைய வைக்கும் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதோடு கடும் குளிர் நிலவி வருகிறது.
மைனஸ் 34 டிகிரி வரை வெப்பநிலை குறைவதால் குழந்தைகள் உள்பட அனைத்து வயதினரும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். உணவு, குடிநீர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் கடும் குளிரால் 162 பேர் பலியாகி உள்ளனர். குளிர்காயகூட வசதி இல்லாத நிலையில் கடந்த 17 நாட்களில் நிலைமை மோசமாகி வருவதால் மக்கள் கதறி வருகின்றனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2021ல் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் உள்நாட்டு போரை தொடங்கி ஒட்டுமொத்த நாட்டையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்தாலும் கூட அதனை பல உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் இருப்பதோடு மக்களின் வாழ்வாதாரமும் மோசமான நிலையில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க தாலிபான்கள் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் பெண்களை வீட்டில் முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் பணி செய்யவும், கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருவதால் தான் அவர்களை உலக நாடுகள் அங்கீகரிக்காமல் வைத்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ள நிலையில் அங்கு தற்போது குளிர்காலம் துவங்கி உள்ளது
இந்நிலையில் தான் தற்போது ஆப்கானிஸ்தானில் கடும் பனி மற்றும் குளிர் நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆப்கானிஸ்தானில் குளிர் நிலவி வருகிறது. மேலும் பனிப்பொழிவும் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. பல இடங்களில் வெப்ப நிலை மைனஸ் 34 டிகிரியை (-29.2 டிகிரி பாரன்ஹீட்) தொட்டுள்ளது. இதனால் உடலை உறைய வைக்கும் அளவில் பனி, குளிர் ஒருசேர மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி ஆப்கானிஸ்தானில் கடும் பனியால் 162 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வீடுகளை கதகதப்பாக்க வைத்து கொள்வதற்கு தேவையான எரிபொருள் வாங்கவும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் பகல் நேரத்தில் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை சேகரித்து தீமூட்டி இரவில் சிறிதுநேரம் குளிர்காய்கின்றனர். உணவு, குடிநீர் இன்றி ஏராளமான மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் குளிரில் உடல் நடுங்குவது பரிதாபமாக உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தொண்டு நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளும் கிடைக்காத சூழல் உள்ளது. இதுபற்றி பேரிடர் மேலாண் துறையின் செய்தி தொடர்பாளர் ஷபியுல்லா ரஹ்மி கூறுகையில், ‛ஜனவரி 10ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வெறும் 17 நாளில் 162 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 84 பேர் இறந்தனர்” என தெரிவித்துள்ளார்.