ஒருவரது குறை சுட்டிக்காட்டப்படும் போது, அதனை அவமானமாக கருதுகிறவர்கள் இருக்கிறார்கள். ஒருசிலர் அந்தக் குறையை உணர்ந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
இந்த இரண்டாம்வகையினர் தங்கள் குறையை வென்று சாதனையாளர்களாக பரிணமிப்பது உண்டு. அப்படியொரு சம்பவம் குடியாத்தத்தில் நடந்தது.
குடியத்தத்தில் உள்ள புகழ்பெற்ற திருமகள் மில்லியில் வேலைக்கு ஆள் எடுப்பதை அறிந்து இளைஞர்கள் அங்கு குவிகிறார்கள். மில் வேலைக்கு சான்றிதழ் பார்த்தா தேர்வு செய்வார்கள்? மில் மேலாளர் வர்க்கீஸ் வாட்டசாட்டமான இளைஞர்களாகப் பார்த்து தேர்வு செய்கிறார்.
அவர்கள் நடுவில் கெச்சலாக ஒரு இளைஞனும் இருக்கிறான். இவனை வைத்து எப்படி வேலை வாங்குவது? இரவுநேர வேலைக்கு இவன் சறாவருவானா என்று வாய்விட்டே கேட்டுவிட்டார் மில் மேலாளர். இது அந்த நோஞ்சான் இளைஞருக்கு அவமானமாகப் போய்விட்டது.
வேறு ஒருவர் என்றால் அவமானத்தை அடிமடியில் வைத்துக் கொண்டு அலைவார்கள். ஆனால், அந்த இளைஞன், உடம்பை பேணுவது என்ற முடிவுக்கு வருகிறான். அப்போது குடியாத்தம் பகுதியில் பிரபலமாக இருந்த ‘மகாபாரதம்’ மாசிலாமணியிடம் தேகப் பயிற்சி எடுத்துக் கொண்டான்.
அத்துடன் தென்னிந்திய பாக்சிங் சாம்பியன் பரமசிவத்திடம் சேர்ந்து பாக்சிங் பயிற்சி எடுத்துக் கொண்டான். ஜி.ராமு என்பவரிடம் ஜுடோ பயிற்சி, சோவியத்யூனியன் சென்று சண்டைப் பயிற்சி பெற்று வந்த ரங்கநாதனிடம் சண்டைப் பயிற்சி, யோகாசனம் தங்கவேலிடம் யோகாசனம் என பலரிடம் சண்டை, யோகா பயிற்சிகள் கற்றுத் தேர்ந்தான். எந்த உடம்பு அவருக்கு வேலை கிடைக்க தடையாக இருந்ததோ அதே உடம்பு இப்போது அவருக்கான மூலதனமாக மாறியது.
ஒருநாள் வட ஆற்காடு கலெக்டர் கலந்து கொண்ட விழாவில் அந்த இளைஞன் தேகப்பயிற்சி செய்து கைத்தட்டல் வாங்கியதை முகவை ராஜமாணிக்கம் பார்த்து, அவரை சினிமாவில் அறிமுகப்படுத்த சென்னை அழைத்து வந்து,
தான் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த தாமரைக் குளம் படத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு டூப்பாக நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். அந்த இளைஞன் ஜுடோ ரத்தினம் என்பதை நீங்களே யூகித்திருப்பீர்கள். முக்தா ஸ்ரீனிவாசனின் தாமரைக் குளம் படம்தான் கே.கே.ரத்தினத்தின் முதல் சினிமா.
அதன் பிறகு பல நடிகர்களுக்கு டூப்பாகவும், சின்னச் சின்ன வேடங்களிலும் ரத்தினம் நடித்தார். குறிப்பாக விட்டலாச்சாரியார் இயக்கத்தில் என்.டி.ராமராவ் நடித்தப் படங்களில் அவருக்கு டூப்பாக பல காட்சிகளில் நடித்துள்ளார்.
இவரது சண்டைத் திறமையைப் பார்த்து மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் 1965 இல் வல்லவன் ஒருவன் படத்தில் இவரை ஸ்டன்ட் மாஸ்டராக அறிமுகப்படுத்தினார்.
அந்தப் படத்தில் ஜெய்சங்கரும், மனோகரும் மோதிக் கொள்ளும் காட்சிக்கு ஜுடோ ஸ்டைலில் சண்டைக் காட்சி அமைத்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் ஸ்டன்ட் மாஸ்டராக முத்திரைப் பதித்தார். சில ஆங்கிலப் படங்களிலும் பணிபுரிந்தார்.
1980 இல் வெளியான ஏவிஎம்மின் முரட்டுக்காளை படம் இவரது சண்டை அமைப்புக்கு சான்று சொல்லும் திரைப்படங்களில் முக்கியமானது. ரஜினியை சூப்பர் ஸ்டாராக நிலைநிறுத்திய முரட்டுக்காளையில் இவரது சண்டைக் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
புதுக்கவிதையில் இடம்பெற்ற பைக் ரேஸ் காட்சிகள், பாயும்புலியின் கரோத்தே சண்டைகள் என ரஜினியை ஆக்ஷன் ஹீரோவாக வளர்த்தெடுத்ததில் ஜுடோ ரத்தினத்தின் சண்டைப் பயிற்சிக்கு முக்கிய பங்குண்டு.
முரட்டுக்காளை தொடங்கி பாண்டியன்வரை ரஜினியின் 49 படங்களுக்கும், சகலகலாவல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, ஒரு கைதியின் டைரி, உயர்ந்த உள்ளம், பேர் சொல்லும் பிள்ளை உள்பட 19 கமல் படங்களுக்கும், கன்னடத்தின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் 69 படங்களுக்கும், என்டிஆரின் 16 படங்களுக்கும், அமிதாப்பின் 4 இந்திப் படங்களுக்கும் இவர் சண்டைப் பயிற்சி அமைத்துக் கொடுத்தார்.
மொத்தம் 1200 படங்களுக்கு மேல் இவர் சண்டை இயக்னராக பணியாற்றியுள்ளார். உலகில் வேறு யாரும் செய்யாத சாதனை இது.
விக்ரம்தர்மா, சூப்பர் சுப்பராயன், தளபதி தினேஷ், ஜாக்குவார் தங்கம், பெப்சி விஜயன், பொன்னம்பலம் உள்பட ஏராளமான பிரபலங்கள் இவரிடம் உதவியாளர்களாகவும், சண்டை நடிகர்களாகவும் பணியாற்றியவர்கள். தற்போது சண்டை இயக்குனராக இருக்கும் ஜுடோ கே.கே.ராமு இவரது மகனாவார்.
ஜுடோ ரத்தினத்தின் முதல் படம் வல்லவன் ஒருவனில் இவரது பெயர் கே.கே.ரத்தினம் என்று இடம்பெறும். இவரது ஜுடோ சண்டைக் காட்சி பிரபலமடைந்த பின், தமிழ் கலை இலக்கிய மன்றம் இவருக்கு ஜுடோ என்ற பட்டத்தை வழங்கியது. அதன் பிறகு இறுதிவரை அந்தப் படத்துடனே அறியப்பட்டார்.
நேற்று தனது 92 வது வயதில் மூப்பு காரணமாக ஜுடோ ரத்தினம் இயற்கை எய்தினார். அவருடன் ஒரு சண்டை சகாப்தம் நிறைவு பெறுகிறது.