கொட்டும் மழைக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜனவரி போராட்டம் முன்னெடுப்பு…
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அனுஸ்டிக்கப்படும் கறுப்பு ஜனவரி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் காந்தி பூங்காவில் அமைந்துள்ள உயிரிழந்த ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பு தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெகதாஸன், பி2பி அமைப்பின் இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன், அமைப்பின் பிரதிநிதி செல்வகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கறுப்பு ஜனவரி தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக ஊடகவியலாளர்கள் கறுப்புப் பட்டி வாயில் அணிந்து சிவப்பு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன், கவனயீர்ப்புப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துகொண்டிருக்கும் தருவாயிலும், மழையையும் பொருட்படுத்தாது ஊடகவியலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.