இலங்கையில் சுமார் 5 இலட்சம் கடன் அட்டைகளை பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த 18 வயதான இளைஞனை குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞன் 90 கடன் அட்டைகளை பயன்படுத்தி 55 லட்சம் ரூபாவுக்கு பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக இணையத்தளம் வழியாக பொருட்களை விநியோகிக்கும் நிறுவனம் ஒன்று கடந்த 4 ஆம் திகதி கணனி குற்றவியல் விசாரணைப்பிரிவுக்கு முறைப்பாடு செய்தது.
இதற்கமைய சந்தேக நபரான இளைஞன் நேற்று குருணாகல் தும்மல்சூரிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞன் சமூக வலைத்தளம் ஊடாக குழுவாக இணைந்து, பிறருக்கு சொந்தமான கடன் அட்டைகளின் தரவுகளை அனுமதியின்றி பெற்று சேமித்து வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் கணனியை சோதனையிட்ட போது அதில் 5 லட்சம் கடன் அட்டைகளின் தரவுகள் இருந்ததாகவும் அவற்றை பயன்படுத்தி இணையத்தளம் வழியாக பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கணனி கமரா, உணவுகள், மதுபானம் உட்பட பல பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
18 வயதான இந்த இளைஞன் சாதாரண தரப்பரீட்சையில் தேர்ச்சி பெறாதவர் எனவும் கூலி வேலைகளை செய்து, அலைபேசி ஒன்றை கொள்வனவு செய்து, இணையத்தளத்தை பயன்படுத்தி இந்த மோசடியை செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.