வட்டி அதிகரிப்பை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ள ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்ற கடனுக்கான வட்டி அதிகரிப்பை உடனடியாக நிறுத்துமாறு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை ஆசிரியர் குழுவுடன் மக்கள் வங்கியின் பொது முகாமையாளரைச் சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், குறித்த கோரிக்கையை எழுத்து மூலம் முகாமையாளரிடம் கையளித்துள்ளார்.

குருசெத கடன்கள்
மக்கள் வங்கியானது பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ‘குரு செத’ கடன்களை வழங்குகிறது.

கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மக்கள் வங்கியில் குறித்த கடனை பெருமளவில் பெற்றுள்ளதோடு, அது தொடர்பான கடன் தவணை மற்றும் வட்டியை செலுத்தி வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

“இந்த ‘குரு செத’ கடன் கடந்த காலங்களில் 9.5 சதவீத வட்டியில் வழங்கப்பட்டது. அந்த வீதத்திற்கு அமைய கடன் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில், வட்டி வீதம் 9.5 வீதத்திலிருந்து 15.5 வீதமாக உயர்த்தப்படுமென்ற அறிவித்தல் கடிதம், வங்கி கிளைகளுக்கு ஊடாக கடன் பெற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” இது ஒரு பாரிய அடக்குமுறை மற்றும் நியாயமற்ற செயற்பாடு என இலங்கை ஆசிரியர் சங்கம் வங்கி நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக கடன் வழங்கும்போது 40 சதவீத கடன் வரம்பை கருத்தில் கொண்டு, அந்த வரம்புக்கு உட்பட்டு 9.5 சதவீத வட்டியில் வழங்கப்படும் கடனுக்கான வட்டி வீதத்தை 15.5ஆக உயர்த்துவதால், மேற்கூறிய 40 சதவீத வரம்பு மீறப்படுவதாக தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது.

ஆசிரியர்கள் கோரிக்கை
ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கருத்துக்கு அமைய, மக்கள் வங்கியின் 2021 ஆண்டு அறிக்கைக்கு அமைய, 14.5 மில்லியன் வாடிக்கையாளர்களில் 1.9 சதவீத, அதாவது 275,500 கல்வித் துறையில் உள்ள பணியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்வித்துறைக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி வீதத்தை அதிகரிப்பதன் மூலம், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் கடன் பெற்ற அனைவரும் மேலும் பாதிக்கப்படுவதாக ஆசிரியர் சங்க தலைவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுத் தொடர்பில் கவனம் செலுத்தி கல்வித்துறைக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்தும் தீர்மானத்தை நிறுத்துமாறும், குறிப்பாக குரு செதவின் கீழ் கடன் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான வட்டியை 9.5 வீதத்திலிருந்து 15.5 வீதமாக உயர்த்தும் தீர்மானத்தை நிறுத்தி, கடனைப் பெறும் போது ஒப்புக்கொள்ளப்பட்ட அதே 9.5 என்ற வட்டி வீதத்தையே அறவிட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த கோரிக்கைக்கு பதிலளித்த வங்கி அதிகாரிகள், இது தொடர்பாக வியாழக்கிழமைக்குள் பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor