அவுஸ்திரேலியாவில் கலாநிதி பட்டங்களை பெற்ற இரட்டையர்கள்

168 வருட வரலாற்றை கொண்டுள்ள அவுஸ்திரேலியாவின் மெர்பேர்ன் பல்கலைக்கழகம் இலங்கையர்களான இரட்டை சகோதரிகளுக்கு கலாநிதி பட்டங்களை வழங்கியுள்ளது.

இலங்கை வம்சாளியான நதீஷா குணரத்ன மற்றும் தேஜானி குணரத்ன ஆகிய இரட்டை சகோதரிகளே மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் 168 ஆண்டு வரலாற்றை மாற்றியுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்னபுர பல்கலைக்கழகத்தில் உணவு விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் கற்கை நெறியில் பட்டம் பெற்ற பின்னர், அவர்கள் பட்டப்பின் படிப்பை மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்தனர்.

சர்வதேச இரட்டையர் தினத்திற்கு முன்தினம் கலாநிதி பட்டங்களை பெற்ற சகோதரிகள்

இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பட்டப்பின் படிப்புக்கான கலாநிதி பட்டங்கள் வழங்கப்படவிருந்தன. தொற்று நோய் பரவல் காரணமாக பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.

இறுதியில் 2022 சர்வதேச இரட்டையர் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், மெல்பேர்னில் நேற்று முன்தினம் இரட்டை சகோதரிகள் இணைந்து தமது கலாநிதி பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

நதீஷா மற்றும் தேஜானி ஆகியோர் தமது பட்டப்பின் படிப்புக்காக சொக்லேட் நுகர்வோரின் உணர்ச்சி மற்றும் உணர்ச்சிகரமான பதில்களை அளவிடுவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்குமான புதிய வழிகளை ஆய்வு செய்தனர்.

தேஜானி சொக்லேட் சுவையின் தாக்கம் தொடர்பிலும் நதீஷா பொதி செய்தல் தொடர்பான தாக்கம் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். தேஜானி தற்போது மெல்பேர்னில் உள்ள CSIRO நிறுவனத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானியாக கடமையாற்றி வருகிறார்.

நதீஷா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் ஆம்வே நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக சேவையாற்றி வருகிறார்.

Recommended For You

About the Author: webeditor