நாட்டில் சமஸ்டி முறைமையிலான ஆட்சி உருவாக்கப்பட வேண்டும்!-நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

சமஸ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் அது இலங்கையில் தமிழ் மக்களையும் பாதிக்காது, சிங்கள மக்களையும் பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்லும் என தந்தை செல்வா 1948ஆம் ஆண்டிலே விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு நேற்று (18-12-2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழர்களது சுதந்திரத்தை பறித்து அவர்களின் இறைமையை பறித்து இலங்கையில் தமிழர்களது உரிமைகளையும் சேர்த்து பிரித்தானிய அரசால் இலங்கைக்கான சுதந்திரமாக 1948ஆம் ஆண்டு வழங்கப்பட்டது

இந்நிலையில் அதற்கு எதிராக ஒரு விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தவர் தந்தை செல்வா.

கடந்த 1948ஆம் ஆண்டு முதலாவது களம் அமைக்கப்பட்டு தமிழர்களுக்கான ஒரு அரசாங்கம் வேண்டும். அந்த அரசு எவ்வாறு அமைய வேண்டும் என்ற ஒரு தீர்க்கதரிசன சிந்தனையோடு தனது பயணத்தை ஆரம்பித்தார் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து என தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான தீர்வு
இதற்கமைய குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றி பேசுவதாயின் தமிழர்களின் விடுதலையை நேசிக்கும் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வதேச நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் பேச வேண்டும்.

இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் வழங்கப்பட்டு இருக்கின்ற போதும் தமிழர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் தமிழர்கள் ஆட்சி செய்த நிலங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை அது சிங்களவர்களுக்கு கிடைத்துள்ளது.

தமிழ் மக்கள் சுதந்திர தமிழர்களாக இருக்க வேண்டும் என்றும் அதற்காகவே கடந்த 1948ஆம் ஆண்டிலேயே தந்தை செல்வா தனது அஹிம்சை வழியிலான போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இனப்பிரச்சினை
இலங்கையில் தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்ரமசிங்கவின் கட்சி சிதைந்து தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்துக்கு சென்று பிரதமராகி, ஜனாதிபதியாகி இருக்கின்றார்.

இந்த நிலையில் பேச்சு வார்த்தை மூலம் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அழைத்திருக்கின்றார்.

தமிழ் மக்களுடைய விடுதலையை நேசிக்கின்ற ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வதேச நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் அனுசரணையுடன் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor