இந்திய கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைவராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இடம்பெற்று வரும் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா தலைவராக செயற்படுகிறார்.
எனினும் அவரை நிரந்தரமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்க வைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள போட்டி
இலங்கை அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் ஒன்று கூடி இந்தத் தீர்மானத்தை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.
இந்திய அணியின் தலைவராக செயற்படும் ரோஹித் சர்மா கடந்த இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் பின்னர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெறும் 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் தலைவராக ஹர்திக் பாண்டியா செயற்படுகிறார். இந்த தொடரின் முதல் போட்டி இன்று இடம்பெறவிருந்த நிலையில், மழைகாரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டது.