ஓமான் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்
இரண்டு இந்திய மாலுமிகள் மாயம்; தேடுதல் பணி தீவிரம்!
ஓமான் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆளில்லா விமான (Drone) தாக்குதலைத் தொடர்ந்து,
அதில் பயணித்த இரு இந்திய மாலுமிகள் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிகரகுவா நாட்டுக் கொடியுடன் (Nicaragua-flagged) பயணித்த ‘எம்.ரி பெட்ரோ டொல்பின்’ (MT PETRO DOLPHIN) என்ற எண்ணெய் கப்பல்,
ஓமானின் சோஹார் (Sohar) துறைமுகத்திற்குள் நுழைவதற்காக நடுக்கடலில் நங்கூரமிட்டுக் காத்திருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கப்பலில் இருந்த பணியாளர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில்,
மாயமான ஏனைய இரண்டு மாலுமிகளையும் தேடும் பணிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
அபாயகரமான கடல் பாதைகளையோ அல்லது முற்றுகைப் பகுதிகளையோ கடக்க முனையாமல்,
துறைமுக நுழைவுக்காக அமைதியான முறையில் நங்கூரமிட்டுக் காத்திருந்த வர்த்தகக் கப்பல் ஒன்றின் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச கடல்சார் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்போ அல்லது நாடோ உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.

