மத்திய தரைக்கடலில் ஈஸ்டர் தினத்தில் 105 பேர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து!: 70-க்கும் மேற்பட்ட அகதிகள் மாயம்.
பாரிஸ் , ஏப்ரல் 5, 2026
ஐரோப்பிய நாடுகளில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் வேளையில், மத்திய தரைக்கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கிக் காணாமல் போயிருப்பது உலக நாடுகளைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லிபியாவிலிருந்து நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஒரு மரத்தாலான படகு ஐரோப்பாவை நோக்கிக் புறப்பட்டது. அதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 105 பேர் பயணித்தனர். இந்தப் படகு லிபியாவின் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து விரைந்த Mediterranea Saving Humans மற்றும் Sea-Watch ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீட்புப் பணிகளைத் தொடங்கின.
இதுவரை 32 பேர் கடலில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இத்தாலியின் லம்பேடுசா (Lampedusa) தீவில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்.
இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 70-க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை; அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடலில் கவிழ்ந்த படகின் அடிப்பகுதியை (Hull) பிடித்ததுக்கொண்டு தப்பிப் பிழைக்கப் போராடிய சிலரை, அந்த வழியாக வந்த இரண்டு வணிகக் கப்பல்கள் மீட்டுள்ளன. இது தொடர்பான காணொளி காட்சிகளைச் ‘சீ-பேர்டு 2’ (Sea-Bird 2) என்ற கண்காணிப்பு விமானம் பதிவு செய்துள்ளது.
இந்த விபத்து குறித்துக் கருத்து தெரிவித்துள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், “இது ஒரு விபத்து மட்டுமல்ல; பாதுகாப்பான பயண வழிகளைத் திறக்க மறுக்கும் ஐரோப்பிய அரசாங்கங்களின் கொள்கைகளால் ஏற்பட்ட உயிரிழப்பு” என்று கடுமையாகச் சாடியுள்ளன.
சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) கணக்கெடுப்பின்படி:
2026-ஆம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து இதுவரை: மத்திய தரைக்கடலில் மட்டும் 683 அகதிகள் உயிரிழந்துள்ளனர்
ஏப்ரல் 3-ஆம் திகதி வரையிலான கணக்கின்படி, 6,175 அகதிகள் இத்தாலியக் கடற்கரைகளை வந்தடைந்துள்ளனர்.
வறுமை மற்றும் உள்நாட்டுப் போர்களிலிருந்து தப்பிக்கத் தங்களின் உயிரைப் பணையம் வைத்துச் செல்லும் அகதிகளுக்கு, மத்திய தரைக்கடல் ஒரு “பெரிய மயானமாக” மாறிவருவது மிகுந்த கவலையை அளிக்கிறது.

