உக்ரைனுக்கு பிரித்தானிய துருப்புகளை அனுப்ப தயார்! – ஜோன் ஹீலி அதிரடி!
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, அங்கு பிரித்தானிய துருப்புகளை அனுப்ப தான் தயார் என்று ஜோன் ஹீலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
“2026 ஆம் ஆண்டு இந்த கொடூரமான போர் முடிவுக்கு வர வேண்டும்” மற்றும், உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
“உக்ரைனுக்கு பிரித்தானிய துருப்புகளை அனுப்பும் பாதுகாப்பு செயலாளராக நான் இருக்க விரும்புகிறேன். ஏனென்றால் பிரித்தானிய துருப்புக்கள் சென்றதும் போர் முடிவுக்கு வரும் என்பது என்று அர்த்தம். பாதுகாப்பான ஐரோப்பாவிற்கு ஒரு வலுவான, இறையாண்மை கொண்ட உக்ரைன் தேவை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க, பல நாடுகளின் ஆதரவுடன் அமைதி காக்கும் படையை உருவாக்க பிரித்தானிய அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது.
மேலும், உக்ரைன் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பிரித்தானிய மக்களை ஜோன் ஹீலி பாராட்டியுள்ளார். “உக்ரைனுக்காக பிரித்தானிய ஒன்றுபட்டுள்ளது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த ஆண்டு நாங்கள் வழங்கும் இராணுவ ஆதரவின் மிக உயர்ந்த அளவைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
பிரித்தானிய ஆயுதப் படைகளுக்கு உக்ரைனுக்குத் தேவையான உதவிகளை செய்ய £200 மில்லியன் நிதி ஒதுக்கப்படும் என்றும், Shaheed ட்ரோன்களை அழிக்க உதவும் புதிய AI தொழில்நுட்பம் கொண்ட ட்ரோன் இடைமறிப்பை உருவாக்க உக்ரைனுக்கு பிரிட்டன் உதவி செய்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் உக்ரைனுக்கு சென்ற ஜோன் ஹீலி, அங்கு நடந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நேரில் கண்டதாக தெரிவித்தார். “உக்ரைன் மக்கள் கடந்த 1,459 இரவுகளில் அனுபவித்ததை இது எனக்கு நினைவூட்டுகிறது” என்று அவர் உருக்கமாக கூறினார்.
மேலும், “ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை உக்ரைன் மக்கள் அஞ்சவில்லை. மேற்கத்திய நாடுகளின் தயவை மட்டுமே உக்ரைன் நம்பியுள்ளது. உக்ரைனின் நண்பர்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டார்கள் என்று ஜனாதிபதி Zelensky க்கு தெரியும்” என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
“உக்ரைன் மக்களின் விருப்பத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்” என்று புட்டினுக்கு ஜோன் ஹீலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தித் தகவல் மூலம் – தி டெலிகிராப்.
Source – The Telegraph.

