பிரான்சில் உயில் எழுதாமல் மறைந்தால் உங்கள் சொத்து யாருக்குச் சொந்தம்? வாரிசுரிமைச் சட்டத்தின் சுவாரஸ்யமான பின்னணி!
வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்துக்களை, உயில் ஏதும் எழுதி வைக்காமல் ஒருவர் மறைந்துவிட்டால் அது யாருக்குச் செல்லும்? “என் மனைவிக்குத்தான்” என்றோ, “என் பிள்ளைகளுக்குத்தான்” என்றோ நாம் மேலோட்டமாக நினைப்பதுண்டு. ஆனால், சட்டத்தின் பார்வை வேறு! இதற்கெனத் தனியொரு ‘வரிசையை’ சட்டம் வகுத்து வைத்துள்ளது. அந்த வரிசையில் யாருக்கு முதல் இடம், யாருக்கு ஏமாற்றம் என்பதைப் பார்ப்போம்.
சட்டத்தின் முன்னுரிமைப் பட்டியல்!
உயில் இல்லாத பட்சத்தில், இறந்தவரின் ரத்த சம்பந்தமான உறவுகளுக்கே சட்டப்படி முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதற்காக நான்கு படிநிலைகளைச் சட்டம் வைத்துள்ளது. முதல் படியில் இருப்பவர்கள் இருந்தால், மற்றவர்களுக்குச் சொத்தில் ஒரு பைசா கூடக் கிடைக்காது!
1. முதல் இடம்: வாரிசுகளின் ஆதிக்கம்
இறந்தவருக்குக் குழந்தைகள் (சட்டப்பூர்வமான, தத்தெடுக்கப்பட்ட) அல்லது பேரப்பிள்ளைகள் இருந்தால், முழுச் சொத்தும் அவர்களுக்கே! மற்ற உறவினர்கள் (பெற்றோர், உடன்பிறந்தோர்) சொத்தின் மீது எந்த உரிமையையும் கோர முடியாது. ஒருவேளை ஒரு பிள்ளை இறந்துவிட்டாலும், அந்தப் பிள்ளையின் வாரிசுகளுக்கு அந்தப் பங்கு சென்றுவிடும்.
2. இரண்டாம் இடம்: பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகள்
பிள்ளைகள் இல்லாத பட்சத்தில் மட்டுமே இரண்டாம் கட்ட உறவுகளுக்குச் சட்டம் வழிவிடுகிறது. இதில் தந்தைக்கும் தாய்க்கும் தலா கால் பங்கு (1/4) சொத்தும், மீதமுள்ள அரைப் பங்கு (1/2) அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளுக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்கப்படும்.
3. மூன்றாம் மற்றும் நான்காம் இடம்: தாத்தா, பாட்டி முதல் மாமா, மச்சான் வரை…
பிள்ளைகளும் இல்லை, பெற்றோரும் உடன்பிறப்புகளும் இல்லை என்ற நிலையில்தான் தாத்தா, பாட்டிக்குச் சொத்து செல்லும். அவர்களும் இல்லையென்றால் சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு நெருக்கத்தின் அடிப்படையில் சொத்து பிரிக்கப்படும்.
ஒரு சுவாரஸ்யமான தகவல்: இந்த நான்கு வரிசைகளிலும் உரிமை கொண்டாட ரத்த சம்பந்தமுள்ள உறவுகள் யாருமே இல்லை என்றால், அந்தச் சொத்து முழுவதையும் அரசாங்கம் எடுத்துக்கொள்ளும்!
வாழ்க்கைத் துணையின் நிலை என்ன?
கணவன் அல்லது மனைவிக்குச் சட்டத்தில் ஒரு தனித்துவமான இடம் உண்டு.
பிள்ளைகள் இருந்தால்: கணவனோ அல்லது மனைவியோ மறைந்தால், மீதமிருப்பவர் இரண்டு தேர்வுகளைச் செய்யலாம். ஒன்று, அந்தச் சொத்தை தன் ஆயுள் முழுவதும் அனுபவிக்கும் உரிமையைப் பெறலாம் (ஆனால் விற்க முடியாது). அல்லது, மொத்தச் சொத்தில் கால் பங்கை (25%) முழு உரிமையுடன் எடுத்துக்கொள்ளலாம்.
பிள்ளைகள் இல்லையென்றால்: இறந்தவரின் பெற்றோர்கள் உயிருடன் இருந்தால், சொத்தில் பாதி வாழ்க்கைத் துணைக்கும், மீதி பெற்றோருக்கும் செல்லும். யாருமே இல்லை என்றால் முழுச் சொத்தும் வாழ்க்கைத் துணைக்கே வந்து சேரும்.
சட்டத்தின் செல்லப் பிள்ளைகள்!
“என் பிள்ளைகளுக்கு என் சொத்தில் ஒரு சதம் (சென்டிம் ) கூடத் தரமாட்டேன்” என்று நீங்கள் கோபத்தில் உயில் எழுதி வைத்தாலும், சட்டம் அதை ஏற்காது!
பிள்ளைகளைச் சொத்திலிருந்து முழுமையாக விலக்கி வைக்கச் சட்டத்தில் இடமில்லை. ஒரு குழந்தை இருந்தால் சொத்தில் பாதி, இரண்டு குழந்தைகள் இருந்தால் மூன்றில் இரண்டு பங்கு எனப் பிள்ளைகளுக்கான குறைந்தபட்ச பங்கைச் சட்டம் உறுதியாகப் பாதுகாக்கிறது. மீதமுள்ள பங்கை மட்டுமே நீங்கள் விரும்பியவர்களுக்கு உயிலாக எழுத முடியும்.
இன்றைய காலத்தில் பலரும் திருமணம் செய்யாமல், ஒப்பந்த அடிப்படையில் அல்லது ஒன்றாக இணைந்து வாழ்கின்றனர். இப்படி வாழ்பவர்களுக்குச் சட்டப்படி எந்த வாரிசுரிமையும் கிடையாது! ஒருவேளை உயில் எழுதாமல் ஒருவர் இறந்துவிட்டால், அவருடன் பல ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த துணைக்குச் சொத்தில் சிறு துரும்பு கூடக் கிடைக்காது என்பதுதான் நிதர்சனம்.

