GMOA இன்று முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்..!

GMOA இன்று முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்..!

இன்று (26) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

05 தொழிற்சங்க வழிமுறைகளின் ஊடாக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

 

அதற்கமைய,

 

01.கிளினிக்குகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் (OPD) இல்லாத மருந்துகளை, வெளி மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்காக துண்டுச் சீட்டுகளை (பரிந்துரைச் சீட்டு) வழங்காமை.

 

02.வைத்தியசாலை அமைப்பிற்குள் இல்லாத ஆய்வுகூட பரிசோதனைகளை, வெளி ஆய்வுகூடங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் செய்துகொள்வதற்காக துண்டுச் சீட்டுகள் அல்லது பரிந்துரைகளை வழங்காமை.

 

03.தற்போது அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கையை வழங்க முடியாவிடின் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்படாதவிடத்து, வைத்தியசாலை அமைப்பிற்குள் புதிய பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்காமை.

 

04.சில சந்தர்ப்பங்களில் அரசியல் நோக்கங்களுக்காகவும் அரசியல் தேவைகளுக்காகவும் நடத்தப்படும் சில கிளினிக்குகள் மற்றும் சுகாதார முகாம்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமை.

 

05.ஏதேனும் ஒரு வைத்தியசாலையில், கிளினிக்கில் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் நோயாளியை பரிசோதிக்கும் போது வைத்தியருக்கு உதவியாக, உதவி உத்தியோகத்தர் ஒருவரை வழங்காவிடின் வைத்தியர்கள் அந்த இடங்களில் கடமையிலிருந்து விலகுதல்.

 

ஆகிய 05 வழிமுறைகளின் கீழ் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

 

இது குறித்து கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க,

 

“நாங்கள் ஆரம்பிக்கும் இந்த ஐந்து தொழிற்சங்க நடவடிக்கைகளும் வேலை செய்யாமல் இருப்பதற்காக அல்ல. நாளை முதல் நாங்கள் வேலை செய்வோம், ஆனால் வேலை செய்யக்கூடிய சூழலுக்குள்ளேயே செய்வோம். நீங்கள் தேவையான வசதிகளை வழங்காவிடின், உங்களாலேயே இந்த இலவச சுகாதார சேவை சீர்குலைகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படியாயின் அதற்கான பொறுப்பை ஏற்க சுகாதார அமைச்சும், சுகாதார அமைச்சரும், அரசாங்கமும் தயாராக இருக்க வேண்டும்.

 

அதேபோன்று ஜனவரி மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை நாங்கள் மத்திய செயற்குழுவைக் கூட்டுகிறோம். இந்த மத்திய செயற்குழு கூட்டத்தில், இதற்கு அப்பால் சென்ற தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான தீர்மானங்களை நாங்கள் எடுப்போம்.

 

அதனால், இந்தத் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும். நினைவில் கொள்ளுங்கள், இதற்கு அப்பால் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளால் ஏதேனும் ஒரு இடத்தில் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்தால், ஏதேனும் ஒரு இடத்தில் நோயாளர் பராமரிப்பு சேவைகள் சீர்குலைந்தால், அதற்கான முழுப் பொறுப்பையும் இந்த சுகாதார அமைச்சும், சுகாதார அமைச்சரும், அரசாங்கமுமே ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin