பிரசன்ன ரணதுங்கவின் பயணத்தடை தற்காலிக நீக்கம்

பிரசன்ன ரணதுங்கவின் பயணத்தடை தற்காலிக நீக்கம்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (ஜனவரி 23, 2026) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

பிரசன்ன ரணதுங்க சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, தனது கட்சிக்காரர் மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக இந்தியா செல்ல வேண்டியுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இந்த வேண்டுகோளைப் பரிசீலித்த நீதவான், ரணதுங்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்க உத்தரவிட்டார்.

வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கப்பட்டாலும், பிரசன்ன ரணதுங்கவிற்கு மேலதிகமாக 5 மில்லியன் ரூபாய் தனிப்பட்ட பிணை விதிக்கப்பட்டதுடன், அவரது பிணைதாரர்களுக்கும் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், அரச காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு (SLIC) சுமார் 4.7 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin