உலப்பனே தேரர் CID யில் இருந்து வௌியேறினார்..!

உலப்பனே தேரர் CID யில் இருந்து வௌியேறினார்..!

தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாட கற்றல் தொகுதிகள் (Modules) தொடர்பான சர்ச்சை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (22) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான கல்வித் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர், விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

 

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தேரர், பிள்ளைகளின் எதிர்காலத்தை அழிப்பதற்காக ஒரு திட்டமிட்ட சதி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இது அதிகாரிகள் மட்டத்தில் தற்செயலாக இடம்பெற்ற தவறல்ல, இது தெளிவாகத் திட்டமிடப்பட்ட ஒரு விடயம். பிள்ளைகளுக்கான ஒரு கற்றல் தொகுதி அல்லது பாடநூல் அச்சிடப்பட்டு வெளிவருகிறது என்றால், அது மிக நீண்டதொரு செயல்முறையாகும். அந்தச் செயல்முறையின் போது குறைந்தது 10 முதல் 15 தடவையாவது பொறுப்புவாய்ந்த அதிகாரிகளினால் அந்தப் புத்தகம் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

 

எனவே, தேசத்தின் பிள்ளைகளின் எதிர்காலத்துடன் விளையாடும் இவ்வாறான கீழ்த்தரமான செயல்கள் யாரோ ஒருவரின் குறுகிய நோக்கங்களுக்காக இடம்பெறவே கூடாது. இந்தத் தவறைச் செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin