தரம் 6 ஆங்கில பாட மொடியூலின் சிக்கலுக்கான காரணம் வெளியானது..!
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், தரம் 06 ஆங்கிலப் பாட தொகுதியில் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் உரிய முறைமையின்றி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தேசிய கல்வி நிறுவகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் இது கண்டறியப்பட்டுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தரம் 06 ஆங்கிலப் பாடக் தொகுதியில் ஆபாச இணையத்தளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய கல்வி நிறுவகத்தினால் ஆரம்பக்கட்ட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அந்த விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அமைய தேசிய கல்வி நிறுவகத்தின் இரண்டு பெண் அதிகாரிகளின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு மேலதிகமாக தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தைக் கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் நேற்று (19) இரவு ‘டிவி தெரண’வில் ஒளிபரப்பான ‘360’ நடப்பு விவகார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
“இது பற்றி விசாரணை செய்ய தேசிய கல்வி நிறுவகத்தினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதற்கமைய 8 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர்களில் மூவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் தற்போது அமுலில் உள்ளன. புத்தகமொன்றை அச்சிடும்போது 12 தடவைகள் இது சோதிக்கப்படும். அதன் பின்னர் மூன்று தடவைகள் ஒப்புநோக்கப்படும். அதன் பின்னர் NIE இனால் ஒப்புநோக்கப்படும். அதன் பின்னர் அச்சிடுவதற்கு முன்னர் இறுதிப் பிரதி சோதிக்கப்படும்.” என்றார்.
இவ்வளவு முறைமைகள் இருந்தும் ஏன் யாரும் இதைக் காணவில்லை? இதன் பின்னணியில் சதித்திட்டம் ஏதேனும் இருக்கலாமா?
“சதித்திட்டம் நடந்ததா என்று தேடுவது மிகவும் தர்க்கரீதியானது. இந்த முழுச் செயல்முறையையும் பின்பற்றாமல் கடைசி நேரத்தில் செய்த திருத்தமே என்பதே விசாரணை முடிவாக உள்ளது. இந்தச் செயல்முறை ஊடாகவே தொகுதி (Modules) செய்யப்பட்டுள்ளன, ஆனால் கடைசி நேரத்தில் செய்த திருத்தம் இந்தச் செயல்முறை ஊடாகச் செல்லவில்லை.” என்றார்.
உரிய அதிகாரிகளின் தகைமைகள் போதுமானதாக இல்லாத போதிலும் அவர்களுக்குத் தேசிய கல்வி நிறுவகத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்தார்.
தகைமைகள் தொடர்பில் பிரச்சினைக்குரிய நிலைமை பற்றித் தெளிவான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள இரண்டு அதிகாரிகள், இது போன்று மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளுவது பிரச்சினைக்குரியது. அங்கே ஒருவரின் மகள் பன்னல பிரதேச சபைக்குத் திசைகாட்டி ஊடாகப் போட்டியிடுகிறார். அரசியல் ஈடுபாடு காரணமாகவா இவர்கள் நிரந்தரமாக்கப்படுகிறார்கள்?
“இல்லவே இல்லை. நாம் அவ்வாறு பார்த்து வேலை செய்வதில்லை. மிகத் தெளிவாக, அவர் தேர்தலில் போட்டியிட்டாலும் சரி அல்லது அவர் எமது கட்சியை ஆரம்பித்தவராக இருந்தாலும் சரி, எம்மால் 100 வீதம் கூற முடியும் நாம் எந்த வகையிலும் தலையிட மாட்டோம். இங்கு ஒரு தவறு நடந்துள்ளது தானே, எனக்கு விளங்கும் வகையில் அவரின் தகைமை தொடர்பான பிரச்சினை வேறொன்று. அது இதற்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம், தகைமை குறைந்தவர்கள் வேலை செய்யும்போது ஏற்படும் தவறுகள் உள்ளன. ஆனால் இங்கு எமக்குத் தெரிவது யாதெனில், இங்கு பாரிய தவறு நடந்துள்ளது. முழுக் தொகுதியையும் பார்த்த பின்னர் தெரிவது, பிள்ளைகளை ஆபாசமான விடயத்திற்கு ஈர்க்கும் நோக்கில், வேறு இடங்களில் உள்ள விடயங்கள் சேர்க்கப்படவில்லை. அதனால்தான் நான் சஜித் பிரேமதாச அவர்களுக்குச் சவால் விடுகிறேன், இந்த வாரம் முடியாவிட்டால் பெப்ரவரியில் காட்டுங்கள், அந்தத் தொகுதியில் உள்ள இணைப்பு (Link) தவிர்ந்து தொகுதியில் வேறு ஆபாசமான விடயங்கள் இல்லை.” என்றார்.

