போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்தினால் இனி தப்ப முடியாது..!
போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக நடமாடும் ஆய்வுகூடம் ஒன்று தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.
போதைப்பொருள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 7,000 இக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
“ஒருவர் மது அருந்துவதென்றால் அது அவருடைய உரிமை, நாங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் மது அருந்துவதாயின், விசேடமாக மது அருந்தாத ஒருவரை அழைத்துச் செல்லுங்கள். இல்லையெனில் வாடகை வாகன சேவையையைப் பயன்படுத்துங்கள். அல்லது வேறொரு சாரதியை ஏற்பாடு செய்யுங்கள் என நாம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளோம்.”
“கடந்த வருடம் வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 31% ஆனோர் பாதசாரிகள் ஆவர். அதேபோல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 31% ஆகவும், பின்னால் அமர்ந்து சென்றவர்கள் 7% முதல் 8% ஆகவும் உள்ளனர்.”
“போதைப்பொருள் பரிசோதனைக்காகத் தற்போது ஒரு தொகுதிக்கு அனுமதி கிடைத்துள்ளது. தேசிய மருத்துவ நிறுவகத்திடம் இப்போது ஒரு நடமாடும் ஆய்வுகூடம் உள்ளது. அது ஹெரோயின், கஞ்சா, பாபுல், ஐஸ் ஆகிய 4 வகையான போதைப்பொருட்களைப் பரிசோதிக்கும் வசதியைக் கொண்டது. தற்போது அந்த மருத்துவ வாகனத்தையும் இணைத்துக்கொண்டு சோதனைகளை முன்னெடுத்துள்ளோம். எனவே போதைப்பொருள் மற்றும் மதுபோதையில் இருக்கும் சாரதிகள் மீது சட்டம் கடுமையாகப் பாயும்.” என்றார்.

