இலங்கைக்கு மிக அருகில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம்..!
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது மாலை 4 மணிக்கு பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 230 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அது மேற்கு – வடமேற்குத் திசையில், தென்மேற்கு வங்காள விரிகுடாவுக்குக் குறுக்காக நகர்ந்து நாளை (09ஆம் திகதி) பிற்பகல் 5.30 மணிக்கும் 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஹம்பாந்தோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இலங்கைக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில்100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

