தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்..!
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம்
(31.12.2025) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், தையிட்டி காணி தொடர்பாக, நீண்டகாலமாக தீர்க்கப்படாத விடயங்களுக்கான ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைய வேண்டும் என்பதே இக் கலந்துரையாடலின் நோக்கம் எனத் தெரிவித்து, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் அடுத்த கட்டம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார்.
இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் – ஏகமனதாக திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க இணக்கப்பாட்டினை தெரிவித்தனர்.
இதன்போது அரசாங்க அதிபர் கட்டம் கட்டமாக காணிகளை விடுவிக்க, விகாராதிபதியின் ஒருமித்த சம்மதத்துடன் விடுவிக்க முடியும் எனத் தெரிவித்து, காணி உரிமையாளர்களுடன் விடுவிக்கக் கூடிய காணிகளின் சாத்தியப்பாடுகள் மற்றும் எல்லைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.
இக் கலந்துரையாடல் ஆக்கபூர்வமான நடைபெற்றதுடன், கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்க அதிபர் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு காணி உரிமையாளர்கள் ஏகமனதாக சம்மதம் தெரிவித்தார்கள்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), தெல்லிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

