சுனாமி ஆழிப்பேரலையின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..! 

தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் சுனாமி ஆழிப்பேரலையின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..!

அனர்த்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூருவதோடு பாதிக்கப்பட்டவர்களிற்கு நல்லாசி வேண்டும் முகமாக, மார்கழி 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு வருடந்தோறும் தேசிய ரீதியாக நினைவு கூரப்பட்டு வருகின்றது. அதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (26.12.2025) காலை 09.00 மணிக்கு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினால் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமாகி, சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,

சர்வமத் தலைவர்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வும் இடம் பெற்றது.

 

அதனைத் தொடர்ந்து, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு. ரி. என். சூரியராஜா அவர்களின் தலைமையுரையுடன், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரின் சிறப்புரைகள் ஆற்றப்பட்டது.

 

இந் நிகழ்வில் கருத்துரையாற்றிய கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், ஆழிப்பேரலை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கடற்றொழி்ல் சார்ந்த குடும்பங்கள் எனவும், இயற்கை அழிவிலிருந்து நாடு மீண்டெழ முடியும் என்ற அனுபவத்தை சுனாமி பேரலைகள் உணர்த்தியதாகவும், இனங்களுக்கிடையிலான அதிக முரண்பாடுகள் நிலவிய காலத்தில் சுனாமி பேரலைகள் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பாங்கினை தாம் நேரில் கண்ணுற்றதாகவும் தெரிவித்தார். மேலும், “டித்வா” அனர்த்தம் கூட ஒவ்வொருவரும் தமது குடும்பத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிந்ததனை தாம் நேரில் கண்டதாகவும், குறிப்பாக காரைநகர் பெண் கிராம அலுவலகர்கள் இடுப்பளவு வெள்ளநீருக்குள் நின்று கடமை புரிந்தார்கள்எனவும், சில விமர்சனம் இருந்தாலும், அரச இயந்திரம் சிறப்பாக செயற்பட்டதை கெளரவ அமைச்சர் சிறப்பாக குறிப்பிட்டார். மேலும், அனைவரும் ஒன்றிணைந்து எமது நாட்டின் அபிவிருத்திக்கு தோள்கொடுப்போம் என தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் உரையாற்றுகையில், இதே தினத்தில் 21 ஆண்டு பின்னோக்கிச் செல்லும் போது எமது நாடு உட்பட பலநாடுகள் சுனாமி ஆழிப்பேரலை காரணமாக பாரதூரமான உயிர் மற்றும் உடமை இழப்புக்களை சந்தித்த நாளாகும் எனவும், இலங்கையில் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டார்கள் எனவும், எமது மாவட்டத்தில் 952 பேரை சுனாமி ஆழிப்பேரலை காவுகொண்டுள்ளது எனவும், 1642 பேர் காயமடைந்தனர் எனவும், 12 பேர் காணாமல் ஆக்கப்பட்டனர் எனவும், 834 பிள்ளைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளார்கள் எனவும், பாரியளவு சொத்து அழிவுகள் ஏற்பட்டது எனவும் தெரிவித்தார். மேலும், மருதங்கேணியில் மேற்படி சுனாமி பேரலைக்குப் பின்னரான நிலமைகளை நேரடியாக கண்டதாகவும், இறந்தவர்களின் உடல்களையும், மரண ஒலங்களைக் கேட்டதாகவும் தெரிவித்து, இன்று வரை அவை நீங்கா வடுவாகவுள்ளதாகவும், தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இனிமேலும் இவ்வாறு நிகழாமலிருக்க விழிப்புணர்வுகள் தேவை என்ற செய்தியினை சர்வதேசத்திற்கு சுனாமி ஆழிப்பேரலை ஏற்படுத்தியுள்ளதாகவும், அண்மையில் ஏற்பட்ட “டித்வா” அனர்த்தம் இயற்கையோடும் போராடும் நிலமைகளை உணர்த்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறு நிகழாமலிருக்க முன்னாயத்த தயார்படுத்தல்களை அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டும் எனவும், உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலியினைத் தெரிவித்தார்.

 

சுனாமி முன்னாயத்தம் தொடர்பான விழிப்புணர்வு காணொளி காட்சி ப்படுத்தப்பட்டது.

 

இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றினார்கள்.

Recommended For You

About the Author: admin