தங்க நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்தவர்கள் நடுத்தெருவில்..!

தங்க நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்தவர்கள் நடுத்தெருவில்..!

நுவரெலியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரகந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் சுனாமி அலை தாக்கிய கடற்கரைப் பகுதிபோல் புரட்டிப் போடப்பட்டுள்ளன.

 

இங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட மரக்கறித் தோட்டங்கள் வெள்ளத்தால் அடியோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கோடிக்கணக்கில் நட்டமடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

 

இப்பகுதியில், ஒருசில விவசாயிகள் ஒரு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரையிலான நிலங்களில் கரட், லீக்ஸ், போஞ்சி, பீட்ரூட் உள்ளிட்ட பல வகையான மரக்கறிகளைப் பயிர் செய்திருந்தனர்.

 

சிலரது விவசாயப் பயிர்கள் அறுவடைக்கு நெருங்கியிருந்த நிலையில் வெள்ளம் ஏற்பட்டதால், பல விவசாயிகள் மிகப் பெரிய நட்டத்தை அடைந்துள்ளனர்.

 

பல விவசாய நிலங்கள் தடம் தெரியாமல் அழிந்து போயுள்ளன.

 

பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்த நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன.

 

நீர் பாய்ச்சும் இயந்திரங்கள் மண்ணில் புதையுண்டுள்ளதுடன், பல காணாமலும் போயுள்ளன.

 

வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் கடன் பெற்றும் பெருமளவான விவசாயிகள் இத்தொழிலில் ஈடுபட்டதாகவும், தற்போது அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ளதாகவும் பலர் வேதனையுடன் தெரிவித்தனர்.

 

தற்போது சேதமடைந்து காணப்படும் விவசாய நிலங்களை மீண்டும் பண்படுத்தி விவசாயம் செய்ய மிக அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

 

மலையகப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வரலாறு காணாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நட்ட ஈட்டைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin