தடைப்பட்ட நீர் விநியோகம் மூன்று நாட்களுக்குள் வழமைக்கு..!

தடைப்பட்ட நீர் விநியோகம் மூன்று நாட்களுக்குள் வழமைக்கு..!

நாட்டை பாதித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகத்தை மூன்று நாட்களுக்குள் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் பொறியாளர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்தார்.

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின்படி, பாவனையாளர்களுக்கு நீர் விநியோகத்தை உடனடியாக வழங்குவதற்காக முப்படைகள், நீர்ப்பாசனத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மின்சார சபையிடமிருந்து உதவி பெறப்பட்டுள்ளதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

 

முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

கடந்த சில தினங்களில் நாட்டைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக, பல மாவட்டங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர் பம்பி நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், கண்டி மாவட்டத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர் பம்பி நிலையங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

 

திஸ்ஸமஹாராம, கதிர்காமம், பதுளை, பண்டாரவளை, வெலிமடை, அம்பாறை, வடமத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் தற்போது நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

 

மேலும் காலி, அனுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் நீர் விநியோகம் இப்போது 100 சதவீதமாக மீளமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

மேல் மாகாணத்தில் உள்ள அம்பத்தலே, லபுகம, கலபுவாவ மற்றும் பியகம ஆகிய முக்கிய நீர் மூலங்களுக்கு சேதமேற்படவில்லை என்றும் களனி நதியின் பெருக்கெடுப்பு காரணமாக நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர் பம்பி நிலையங்களுக்கு இருந்த ஆபத்து தற்போது தணிந்து விட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தலைவர் தெரிவித்தார்.

 

நீர் விநியோகம் தடைபட்டுள்ள பல பகுதிகளுக்கு நீர் பவுசர்கள் மூலம் நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

நீர் விநியோகம் தடைபட்டுள்ள ஏனைய பகுதிகளுக்கு முப்படைகள், நீர்ப்பாசனத் திணைக்களம், மின்சார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் நீர் விநியோகத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குள் 100 சதவீத நீர் விநியோகத்தை வழங்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin