டிட்வா சூறாவளி: தமிழ்நாட்டுக்கான எச்சரிக்கை !
தமிழ்நாட்டில் டிட்வா சூறாவளி: 5 மாவட்டங்களுக்கு செஞ்சமிக்ஞை!
இலங்கையின் கரையோரத்தைக் கடந்து நகர்ந்த ‘டிட்வா’ சூறாவளி, இன்று (நவம்பர் 30) அதிகாலை வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக் கடற்கரையை நெருங்கவுள்ளதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சூறாவளியின் நிலைநேற்று (நவம்பர் 29) அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, டிட்வா சூறாவளி தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு இலங்கை அருகே நிலை கொண்டிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இது மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக் கடற்கரையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கனமழை எச்சரிக்கை மற்றும் செஞ்சமிக்ஞை
கனமழை: அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 29, 30) தமிழகத்தின் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செஞ்சமிக்ஞை (Red Alert): அதிகனமழைப் பொழிவின் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்குச் செஞ்சமிக்ஞை விடுக்கப்பட்டுள்ளது.
விளைவுகள்:
இந்த மழையால் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ளூர் வெள்ளப் பெருக்கு அல்லது நீர் சூழ்ந்த நிலை ஏற்படலாம் எனவும், மலைப் பிரதேசங்களில் திடீர் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சேதங்கள்: வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை கடற்கரைப் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியதால், கோடியக்கரை முழுவதும் இருளால் சூழப்பட்டது.
இந்தியா வழங்கிய உதவி
இதேவேளை, டிட்வா சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, இந்தியா உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

