அனர்த்தத்தினால் தடைப்பட்ட தொலைத்தொடர்பு வலையமைப்புகளை சீர்செய்ய அரசாங்கம் விசேட நடவடிக்கை..!
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக தடைப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகளை உடனடியாக சீர்செய்வதற்கு எடுக்க வேண்டிய விசேட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கும் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (29) தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகம், ‘Clean Sri Lanka’ செயலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) ஆகியவை இணைந்து இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக Transmission Towers களில் மின் தடை மற்றும் வலையமைப்பு செயலிழப்புகள் காரணமாக மக்களுக்கு, குறிப்பாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தமது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமை தொடர்பில் இங்கு விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, மின் தடை ஏற்பட்டுள்ள கோபுரங்களுக்கு Generators அல்லது மாற்று வலுசக்தியை உடனடியாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் மின்சார சபைக்கும் இடையே நேரடி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், சேதமடைந்த கோபுரங்களை சீர்செய்ய அனர்த்தப் பகுதிகளுக்கு தொழில்நுட்ப குழுக்களை அனுப்ப அரசாங்க போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் படைகளின் ஆதரவை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
அனர்த்தங்களின் போது வலையமைப்பு தடைகளைக் குறைத்து, அவசர அழைப்புகளுக்கு (Emergency Calls) முன்னுரிமை அளிக்க செயற்பாட்டாளர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் முழுமையான பங்களிப்பை வழங்கும் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதன்போது வலியுறுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பந்துல ஹேரத் ஆகியோருடன் Clean Sri Lanka செயலகத்தின் மேலதிக செயலாளர் உட்பட அரசாங்கத்தின் உயர் அரச அதிகாரிகள், இந்நாட்டின் முக்கிய தொலைபேசி சேவை வழங்குநர்களான டயலொக்(Dialog), எஸ்.எல்.டி-மொபிடெல்(SLT-Mobitel), ஹட்ச் (Hutch)மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


