ரூபா 170 மில்லியனில் அமைக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் யாழ்ப்பாண உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (23.11.2025) காலை 09.00 மணிக்கு பழைய பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்களும், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இந் நிகழ்வில் ஆரம்பத்தில் பழைய பூங்கா வளாகத்தில் சம்பிரதாய முறைப்படி அதிதிகளால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வுக் கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்த கெளரவ அமைச்சர்கள், கெளரவ ஆளுநர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவட்டச் செயலகம் ஊடாக இவ்வாண்டு ஒரு திட்டத்திற்கு அதிகூடிய நிதியாக ரூபா 170 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், கெளரவ விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பலமுறை விஜயம் செய்து மாவட்ட விளையாட்டு அபிவிருத்திக்கு உறுதுணை யாகவுள்ளார் எனவும் இதற்கு தமது நன்றியினை கெளர அமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்தார். மேலும், உள்ளக விளையாட்டரங்கம் அமையவுள்ள இடம் ஏற்கனவே வலைப்பந்தாட்ட சங்கம் மற்றும் கூடைப்பந்தாட்ட வழங்கப்பட்டது எனவும் அதனை அச் சங்கங்கள் உடன் கலந்துரையாடி மீளப்பெற்று அனைத்து யாழ்ப்பாண மாவட்டம் பயன்பெறும் வகையில் உள்ளக விளையாட்டரங்கம் அமைக்கப்பவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 2025 ம் ஆண்டு ஐனவரி முதல் பழைய பூங்கா வளாகத்தில் 280 மரங்கள் நாட்டப்பட்டு மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களால் நீர் ஊற்றி பராமரிக்கப்படுவதாகவும், இதன் மூலம் எமது சூழல் இயற்கையுடன் பேணப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், எமது மாவட்ட அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக விஜயம் மேற்கொண்டுபல்வேறு அபிவிருத்திக்கு பங்களிப்பு ஆற்றிவரும் கெளரவ பிமல் ரத்நாயக்க அவர்களுக்கும், பூரணமான வழிகாட்டுதலில்களை வழங்கிவரும் கடற்றொழி்ல் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் மக்களின் சார்பில் தமது நன்றியினை அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், இத் திட்டம் முழுமை பெறுவதற்கு மேலதிக நிதி தேவைப்பட்டால் அதனை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாக கெளரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந் நிகழ்வில் அதிதிகள் உரையினைத் தொடர்ந்து, அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற 23 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பெற்றவர்கள் அதிதிகளால் கெளரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு. பிரேமச்சந்திரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு எஸ். ரமேஷ்குமார்,
உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள், யாழ்ப்பாண மாவட்ட வீர வீராங்கனைகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

